ஆக்ஸ்போர்டு: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மாணவி கொலை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரது உரை தடைபட்டது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ‘பெண்கள், குழந்தைகள், பெண்களுக்கான அதிகாரமளித்தலில் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டிருக்கும் சமூக மேம்பாடு’ என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோது, பார்வையாளர்களில் 6 பேர் எழுந்து நின்று, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உள்ளிட்ட மாநிலத்தின் பிரச்சினைகளை எழுப்பும் பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பார்வையாளர்களுக்கு மத்தியில் அவர்கள் தொடர்ந்து நின்றுகொண்டு பதாகைகளை கைகளில் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த மம்தா பானர்ஜி, தனது உரையின் நடுவில் அவர்களுக்கு பதிலளித்தார். “ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மாணவி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். மத்திய அரசு அதை எடுத்துக்கொண்டுள்ளது. அது எங்களிடம் இல்லை. தயவுசெய்து இங்கே அரசியல் செய்யாதீர்கள். இந்த மேடை அரசியலுக்கானது அல்ல. வேண்டுமானால் நீங்கள் இதை மேற்கு வங்கத்தில் செய்ய முடியும். அங்கே சென்று உங்கள் போராட்டத்தை வலுப்படுத்துங்கள். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடுங்கள்” என்று தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ(எம்) கட்சியின் மாணவர் அமைப்பின் பிரிவான SFI-UK, இந்த போராட்டம் தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்கத்தின் சமூக முன்னேற்றத்துக்கு முன்னோடியாக டிஎம்சி திகழ்வதாகக் கூறும் மம்தா பானர்ஜி, அதற்கான ஆதாரங்களை வழங்குமாறு கேட்டு அவரது அப்பட்டமான பொய்களை நாங்கள் வெளிப்படையாக எதிர்த்தோம். எங்கள் கருத்துக்களை அமைதியாக வெளிப்படுத்த அனுமதிப்பதற்கு பதிலாக, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
மேற்கு வங்கத்தின் மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, SFI-UK மம்தா பானர்ஜி மற்றும் TMC இன் ஊழல் நிறைந்த, ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து செல்வதற்கு முன் அங்கு தனக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறலாம் என மம்தா பானர்ஜி அச்சம் வெளியிட்டிருந்தார். அதேநேரத்தில், ஏதேனும் சம்பவம் நடந்தால் அது தனக்கு அதிக விளம்பரத்தையே பெற்றுத் தரும் என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.