கேரள எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டி கடந்த இரண்டு மாதங்களாக சர்வே ஒன்றை நடத்தியது. அதன் முடிவு வெளியிடப்பட்ட நிலையில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மலப்புறத்தில் ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்டுக்கொண்ட 10 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மலப்புறம் மாவட்டம் வளாஞ்சேரி பகுதியில் ஒருவருக்கு ஹைரிஸ்க் ஹெச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு போதை ஊசி செலுத்திக்கொள்ளும் வழக்கம் இருந்ததாகவும், அவருடன் சேர்ந்து ஒரே சிரஞ்ச் பயன்படுத்தி போதை ஊசி போட்டுக்கொண்ட மேலும் 9 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பத்துபேரில் 3 பேர் வடமாநில தொழிலாளர்கள். மற்ற அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
ஹெச்.ஐ.வி பாதித்ததில் திருமணம் செய்துகொண்டவர்களும் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஹெச்.ஐ.வி பாதித்து ஹைரிஸ்க் நிலையில் உள்ளவர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தினோம். அதன் அடிப்படையில் 10 பேருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை கண்டறிந்தோம். அவர்கள் ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்டுக்கொண்டதன் காரணமாக ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஓரிடத்தில் சில சிரிஞ்சுகளியும் கண்டுபிடித்துள்ளோம். ஹெச்.ஐ.வி-க்கு சிகிச்சை உண்டு என்பதையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம்” என்றனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே சிரஞ்சை பலமுறை பயன்படுத்தி போதை ஊசி போட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹெச்.ஐ.வி பதிக்கப்பட்ட அனைவரும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ, வேறு யாருக்கேனும் பாதிப்பு உள்ளதா என சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
