மதுரை: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத உதவும் நபர்களை பார்வையற்ற மாற்றத் திறனாளிகளே தேர்வு செய்ய அனுமதிக்கக் கோரிய வழக்கில், டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி டாக்டர் பி.வேல்முருகன். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 1 “தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசுப் பணி தேர்வுகளில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதில்லை. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் நபரை தேர்வு எழுத உதவ தேர்வு செய்யலாம்.
தேர்வு எழுத உதவும் நபரை தேர்வுக்கு 2 நாட்கள் முன்பு சந்தித்து அந்த நபர் தங்களுக்குப் பொருத்தமான நபராக இருப்பாரா என பரிசோதிக்கலாம். அவசர காலத்தில் தேர்வு எழுத உதவும் நபரை மாற்றலாம். ஒவ்வொரு தேர்வுக்கும் ஒருவரை தேர்வு செய்யலாம் என 2021-ம் ஆண்டின் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் தேர்வுக்கான விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை டிஎன்பிஎஸ்சி பின்பற்றுவதில்லை. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத உதவும் நபர்களை டிஎன்பிஎஸ்சியே ஒதுக்குகிறது. அந்த நபர்கள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கேள்விகளை புரிந்து பதிலளிக்க போதுமான நேரம் வழங்குவதில்லை. வேகமாக பதிலளிக்க கூறுகின்றனர். இதனால், தேர்வுகளில் தவறுகள் நேரிடுகின்றன.
அதே நேரத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, தேர்வு எழுத உதவும் நபர்களை மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர் அழைத்து வரவும் அனுமதிக்கப்படுகிறது.
எனவே, டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசுப் பணி தேர்வுகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத உதவும் நபர்களை அவர்களே தேர்வு செய்ய அனுமதிக்கவும், தேர்வு எழுத உதவும் நபர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் தேர்வு விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கவும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தேர்வு அறைக்குள் அவர்கள் பயன்படுத்தும் பிரைலி கைக்கடிகாரம், கணித போர்டுகளை கொண்டுச்செல்ல அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.