கோவை / நாமக்கல்: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காஸ் டேங்கர் லாரிகள் போராட்டம் தொடரும் என்று உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டம் காரணமாக சுமார் 5,000 டேங்கர் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிஉள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டல எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த சங்கத்தில் உள்ள டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 5,000 லாரிகள் இயக்கப்படுகின்றன.
இந்த சூழலில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். இப்போராட்டம் நேற்று காலை தொடங்கியது.
இந்நிலையில், கோவை அவிநாசி சாலை, லட்சுமி மில் அருகே உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7.45 மணி வரை நடந்தும், தீர்வு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது: 3 நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது எங்கள் கோரிக்கைகளை, உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுக்கின்றன. எடை, தொலைவுக்கு ஏற்ப வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அபராத தொகை என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. இதனால் தொழிலை நடத்த முடியாது.
எனவே, காஸ் டேங்கர் லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. இது தொடர்பாக 1,500 உறுப்பினர்களிடமும் ஆலோசித்துதான் மற்ற முடிவை எடுப்போம். அழிவை நோக்கி செல்லும் தொழிலையும், சங்க உறுப்பினர்களையும் காப்பாற்றும் நோக்கில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் வெற்றி பெறுவோம்.
எங்களது வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சென்னை, மங்களூரு, கொச்சி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கேஸ் டேங்கர் லாரிகள் செல்லாமல் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சுமார் 5,000 கேஸ் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தென் மண்டலத்தில் மட்டும் 4,000 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எங்களது போராட்டத்தால் அரசுக்கு தற்போது வருவாய் இழப்பு இல்லை. அதேநேரம், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். வாகனத்தை இயக்காவிட்டாலும், அதற்கான வரி கட்டணங்களை நாங்கள் செலுத்தியுள்ளோம். எனவே, இழப்பு என்பதைவிட, மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதுதான் எங்கள் நோக்கமாகும். எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் நோக்கமும் இதுதான். எனவே, எண்ணெய் நிறுவனத்தினர் இதற்கு ஒரு வழிமுறைகளை கண்டுபிடிப்பார்கள்.
தற்போது 3 நாட்களுக்கு காஸ் இருப்பு உள்ளது. அதற்கு பிறகுதான் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி விதிமுறைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்ற வேண்டும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் இப்பிரச்சினையில் தலையிட்டு, ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, அனைத்து லாரி உரிமை யாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதுவரை டேங்கர் லாரி வேலைநிறுத்த போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை டேங்கர் லாரிகள் ஓடாது. இவ்வாறு அவர் கூறினார்.