தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
அகில இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் உச்சி மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்றைய தினம் உலகம் இந்தியாவை உற்று நோக்கத் தொடங்கியுள்ளது. எதிர்காலம் இந்தியாவுக்குரியதாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஐஐடி-க்கு நேரில் வராமல் ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கும் வகையில் மேம்பாடு அடைந்துள்ளது. உலக அளவில் விண்வெளி மற்றும் செமிகண்டக்டர் துறையில் இந்தியா பிரமிக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது. ஸ்டார்ட்- அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது.
இந்தியர்கள் அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்தவர்கள். ஆங்கில மொழித்திறன் வாயிலாக இன்னும் வளர்ந்துள்ளோம். இன்றைய தினம் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் நாம் முன்னணியில் இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா உலகளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. பொருளாதாரத்தில் அடுத்த ஆண்டுக்குள் 4-வது இடத்தை பிடிப்போம். 2028-க்குள் 3-வது இடத்துக்கு முன்னேறுவோம். நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், 2047 சுதந்திர தினத்துக்குள் உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாற முடியும்.
தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தின. அதன் காரணமாக, தற்போது தென்னிந்திய மாநிலங்களில் பிறப்பு சதவிகிதம் குறைந்துவிட்டது. ஆனால் உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. குழந்தை பிறப்பு சதவீதமும் அங்கே அதிகம்.
இந்நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதும் நமக்கு ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் உ.பி., பிஹார் மாநிலங்களுக்கு அது சாதகமாக அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் வெளிநாட்டுக்குச் செல்வதுபோல் வடமாநிலத்தினர் இங்கு வந்து குடியேற நேரிடும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் முதல்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை நடவடிக்கை தண்டனையாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இத்தகைய சூழலில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக கவலை தெரிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.