பட்டு உற்பத்தித்திறனை ஊக்குவிக்க 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.29.46 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்டுவளர்ச்சித்துறை மற்றும் கைவினைப்பொருட்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் பட்டு உற்பத்தியை பெருக்கி பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கிராமப்புறங்களில் 24 ஆயிரம் பட்டு விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் பட்டு விவசாயிகளுக்கு ரூ.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு அதன் விளைவாக மல்பெரி பரப்பு 48 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது. அதேபோல், 3811 பட்டு விவசாயிகளுக்கு ரூ.40.91 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 250 பட்டு விவசாயிகளுக்கு ரூ.87.5 லட்சம் பவர் டிரில்லர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டில் 1,834 மெட்ரிக் டன்னாக இருந்த பட்டு உற்பத்தி தற்போது இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் 2,723 மெட்ரிக் டன்னாக அதிகரித்து தேசிய அளவில் வெண் பட்டு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
தமிழகத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நிறுவனமாக பூம்புகார் நிறுவனம் விளங்கி வருகிறது. ரூ.1 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடலூர் பூம்புகார் விற்பனை நிலையம் விரைவில் திறக்கப்படும். பூம்புகார் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.165 கோடியே 69 லட்சம் மதிப்புள்ள கைவினை பொருட்களை விற்பனை செய்துள்ளது. ரூ.2.92 கோடி மதிப்பிலான கலைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதோடு ரூ.2.67 கோடி மதிப்புள்ள கலைப்பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 61 லட்சத்தை லாபமாக ஈட்டியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பட்டுவளர்ச்சித்துறை: இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் பட்டு உற்பத்தித்திறனை ஊக்குவிக்க 3050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.29.46 கோடி உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல், அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்களை நடவு செய்யும் 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6.82 கோடி உதவித்தொகை அளிக்கப்படும். 3050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.4.75 கோடி மதிப்பீல் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும்.
தென்மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.3.5 கோடி செலவில் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் நிறுவப்படும். அதேபோல், தேனி-சின்னமனூர் சாலையில் ரூ.3.5 கோடி செலவில் மின்னணு ஏலமுறை உள்பட அனைத்து வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம் அமைக்கப்படும். ஓசூரில் உள்ள தமிழ்நாடு பட்டுவளர்ச்சி பயிற்சி நிலையத்தில் ரூ.2.13 கோடி செலவில் 3050 பட்டுவிவசாயிகளுக்கு தொழிலநுட்ப பயிற்சி அளிக்கப்படும். மல்பெரி நாற்று உற்பத்தியை ஊக்குவிக்க 50 ஏக்கர் பரப்பில் மல்பெரி நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.18.75 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
கைத்திற தொழில்கள் வளர்ச்சிக்கழகம்: கைவினைக்கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை மின்-வணிகம் (இ-காமர்ஸ்) மூலம் உலக சந்தைக்கு எடுத்துச்செல்லும் வகையில் ரூ.2 கோடி மதிப்பில் கைவினை பொருட்கள் சந்தை இயக்கம் செயல்படுத்தப்படும். பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது பெறும் கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் 5 கிராம் வெள்ளிப்பதக்கம் 50 கிராம் பதக்கமாக உயர்த்தப்படும். மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.