பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நிலையை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கிறது: எஸ்.ஜெய்சங்கர்

புதுடெல்லி: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தியா மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், சர்வதேச மட்டத்தில் அதை எடுத்துச் செல்வதாகவும் நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் நிலை தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பாஜக எம்பி அருண்குமார் சாகர் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “உறுப்பினர் வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அவரது கேள்வியில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை இந்தியா கண்காணிக்கிறதா என்பது. இரண்டாவதாக, சர்வதேச அளவில் இதைப் பற்றி நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றியது.

முதல் பகுதிக்கு எனது பதில், ஆம்! பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நாங்கள் மிக நெருக்கமாகக் கண்காணிக்கிறோம். உதாரணமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், இந்து சமூகத்துக்கு எதிராக 10 அட்டூழிய வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பானவை. இரண்டு, கடத்தல் தொடர்பானவை. ஒன்று ஹோலி கொண்டாடும் மாணவர்களுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கை தொடர்பானது என்பதை நான் சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்துக்கு எதிராக மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரு வழக்கில், ஒரு சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டது. மற்றொரு வழக்கில், ஒரு பழைய குருத்வாராவை மீண்டும் திறந்ததால் ஒரு சீக்கிய குடும்பம் அச்சுறுத்தப்பட்டது. அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி மதமாற்றம் செய்ததாக வழக்கு உள்ளது.

அகமதியா சமூகத்தவர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு வழக்கில், ஒரு மசூதிக்கு சீல் வைக்கப்பட்டது, மற்றொரு வழக்கில், 40 கல்லறைகள் தனிமைப்படுத்தப்பட்டன. ஒரு கிறிஸ்தவருக்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனநிலை சரியில்லாத அவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினைகளை இந்தியா கொண்டு செல்கிறது. உதாரணமாக, பிப்ரவரி மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள நமது பிரதிநிதி, பாகிஸ்தானில் மனித உரிமைகள் மீறல், துஷ்பிரயோகம், சிறுபான்மையினரை துன்புறுத்துதல், ஜனநாயக மதிப்புகளை திட்டமிட்ட முறையில் சீர்குலைத்தல் ஆகியவை அரசுக் கொள்கைகளாக இருப்பதை சுட்டிக்காட்டியது. மேலும், ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான், யாருக்கும் போதனை செய்ய முடியாது. அதற்கு பதிலாக, பாகிஸ்தான் தனது சொந்த மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிவித்தார்.

மற்றொரு உதாரணமாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐ.நா. பொதுச் சபையில் நமது தூதர் பாகிஸ்தானின் வெறித்தனமான மனநிலையை அடிக்கோடிட்டுக் காட்டிப் பேசியதை குறிப்பிடலாம். எனவே, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நாங்கள் சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்கிறோம்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.