இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கூறி, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை சேர்ந்த கவுரவ் ராம் ஆனந்த் என்ற மீனவரை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் பாகிஸ்தானில் உள்ள மாலிர் சிறையில் ஆனந்த் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மாலிர் சிறையில் இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில் உள்ள கழிவறையில் மீனவர் ஆனந்த் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என சிறை கண்காணிப்பாளர் அர்ஷாத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த மீனவர் ஆனந்தின் குடும்பத்தினரிடம் அவரது உடலை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் பெரும்பாலான இந்திய மீனவர்கள் குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் சிறைகளில் உள்ள மீனவர்களின் நலன் குறித்து ‘எத்தி'(Ethi) மற்றும் ‘அன்சார் பர்னி'(Ansar Burney) ஆகிய அறக்கட்டளைகள் கண்காணித்து வருகின்றன.
பாகிஸ்தானில் தற்போது சுமார் 190 இந்திய மீனவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கடுமையான மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ‘எத்தி’ அறக்கட்டளையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.