“ஏஐ-க்கு மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் உணர்வுகளின் தன்மையை புரிந்துகொள்ள முடியாது. ஏஐ பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கே ஒரு அவமரியாதை.” – Hayao Miyazaki
வாட்ஸ் அப்பில் சாதாரணமாக நாம் அனுப்பும் மெசேஜ்களைக் கூட ஏஐ டூல்களைப் பயன்படுத்தி மெருகேற்றும் காலத்தில் இருக்கிறோம். எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என ஆரம்பித்து எல்லாமே ஏஐ என்று விந்தையான, சவாலான ஒரு எதிர்காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும், வேலைவாய்ப்புகள் எல்லாம் பறிபோகாது நாம் தொழில்நுட்பத்தைக் கையாளக் கற்றுக் கொண்டால், அது நமக்கு உறுதுணை அம்சமாகத்தான் இருக்கும் என்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில்தான் ‘வேலையை விடுங்கள்… கலைக்கும் ஆபத்து’ என்று உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
டிஸ்னி ஸ்டூடியோ, பிக்சார் ஸ்டூடியோ என்றெல்லாம் மேற்கத்திய ஸ்டூடியோக்களையும் அவர்களின் அனிமேக்களையும் நமக்குத் தெரியும். அதேபோல் ஆசிய அளவில் பிரபலமான ஸ்டூடியோதான் இந்த ஸ்டூடியோ கிபிலி (Studio Ghibli). இதன் இணை நிறுவனர் ஹாயாவோ மியாஸகி (Hayao Miyazaki). கடந்த இரு தினங்களாக எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக உலாவியவர்கள் அங்கே ஸ்டோடியோ கிபிலி உலகம் உருவாகிவிட்டதாக உணர்ந்திருப்பார்கள். காரணம், ஓபன் ஏஐ நிறுவனம் சேட்ஜிபிடியில் இமேஜ் ஜெனரேஷன் சேவையில் ஒரு அப்டேட்டை வழங்கியுள்ளது. அந்த அப்டேட்டை பயன்படுத்தி அசலுக்கு நிகராக எக்ஸ் வாசிகள் தங்களின் புகைப்படங்கள், தங்கள் செல்லப் பிராணிகளின் புகைப்படங்கள், ஏன் காப்பி கோப்பையைக் கூட கிபிலி ஆர்ட்டாக மாற்றி பகிர்ந்து வருகின்றனர்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் தொடங்கிய இந்த ட்ரென்ய் இன்ஸ்டாகிராம், ரெட்டிட் எனப் பரவி ஆங்காங்கே படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஏதோ பாவம் பிழைத்துப் போகட்டும் என்பதுபோல் #GhibliStyle, #AIGhibli என்று ஸ்டூடியோ கிபிலி படங்களுக்கு கிரெடிட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மட்டுமல்ல ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் கூட தனது எக்ஸ் ப்ரொஃபைல் பிக்சரை ஸ்டூடியோ கிபிலி ஸ்டைலில் மாற்றியுள்ளார். கூடவே பகிர்ந்துள்ள ட்வீட்டில், “ஏழரை ஆண்டுகளாக சூப்பர் இண்டலிஜென்ஸ் டூலான AI-ஐ மேம்படுத்த நான் உழைத்தேன். அது புற்றுநோய் சிகிச்சையில் இருந்து பல்வேறு விதத்திலும் இன்று பயனளிக்கிறது. ஆனால் இந்த இரண்டரை ஆண்டுகளாக என்னை எல்லோரு வெறுக்கிறார்கள். ஸ்டூடியோ கிபிலி ஏஐ ஜெனரேடட் இமேஜ் போன்ற சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் வெறுப்பதா?” எனப் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்தப் போக்கு ஸ்டூடியோ கிபிலி ரசிகர்களை வெகுண்டெழச் செய்துள்ளது. அதன் இணை நிறுவனர் ஹாயாவோ மியாஸகி ஏஐ இமேஜ் பற்றி முன்னரே பேசிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்து தங்களின் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். மியாஸகியின் ஓவியங்கள் உணர்வுபூர்மவாக உருவாக்கப்படுபவை. அவை உண்மையானது. அதுதான் அவற்றின் தனிச்சிறப்பு என்று கிபிலி ரசிகர்கள் கூறுகின்றனர்.
மியாஸகி சொல்வது என்ன? – ஏஐ தொழில்நுட்பம் குறித்து மியாஸகி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. Spirited Away, My Neighbour Totoro போன்ற அனிமேஷன் படங்களை உலகுக்குக் கொடுத்த மியாஸகி, “ஏஐ -க்கு மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் உணர்வுகளின் தன்மையை புரிந்து கொள்ள முடியாது. ஏஐ பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கே ஒரு அவமரியாதை. அழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் நம் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறோமோ என்று ஐயப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். அந்த வீடியோவைப் பகிர்ந்து ஆதங்கப்படுகின்றனர் அவர் மீதும் ஸ்டூடியோ கிபிலி ஓவியங்கள் மீது ஈர்ப்பும், மரியாதையும் கொண்ட ரசிகர்கள்.
ஆசிய கலைகளை சீண்டிப் பார்க்கும் செயலா? – ஸ்டூடியோ கிபிலி ஏஐ இமேஜ் ஜெனரேஷன் ஆப்ஷன் பற்றி கல்லூரி மாணவி ஒருவரிடம் கேட்கும்போது அவர் முன்வைத்த வாதங்கள் சற்று சுவாரஸ்யமானதவே இருந்தன. அவர் கூறியது: “நான் சில மாதங்களுக்கும் முன்னர் தான் ஸ்டூடியோ கிபிலியின் விஸ்பர் ஆஃப் தி ஹார்ட்ஸ் படத்தைப் பார்த்தேன். இன்னும் பல படங்களைப் பார்க்கத் தூண்டியது. டிஸ்னி அனிமேஷன் படங்களில் இல்லாத சில சுவாரஸ்யங்கள் ஸ்டூடியோ கிபிலியில் இருந்தது. நேற்றுதான் நானும் இதை சாட் ஜிபிடி ஏஐ பயன்படுத்தி இமேஜ் ஜெனரேட் செய்ய முடியும் என்பதை அறிந்தேன். எனக்கு உண்மையில் வருத்தமாகத் தான் இருந்தது.
எனக்கு ஓவியம் பிடிக்கும். சிறு வயதிலிருந்தே அதில் ஆர்வம் இருந்தது. வண்ணங்களை நாம் எக்ஸ்ப்ளோர் செய்வது, படங்களை நம் கைகளாலேயே வரைவது என்பது ஆனந்த அனுபவம். அதுவும் ஸ்டூடியோ கிபிலி ஆர்ட் உருவாகும் விதம் தொடர்பான இன்ஸ்டா வீடியோக்கள் பார்த்திருக்கிறேன். அதில் அவ்வளவு உழைப்பு இருக்கும். வெறும் உழைப்பு மட்டுமல்ல க்ரியேட்டிவிட்டியும் தான். ஆனால் அதை ஒரு ஏஐ டூல் அசாதரணமாக ரெப்ளிகேட் செய்யுமென்றால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. கவலையாக இருக்கிறது. ஏஐ கவிதைகள், ஏஐ இசை என நிறைய கொட்டிக் கிடக்கும் சூழலில் ஒரு பிரத்யேக கலையை ஏஐ மூலம் ஜெனரேட் செய்வது உண்மையிலேயே மியாஸகி சொல்வது போல் இன்சல்ட் தான். நான் இதை ‘கிராண்ட் இன்சல்ட்’ என்பேன்.
மேற்கத்திய நாடுகளில் நிறைய நிறைய பாப் இசை பேண்ட்கள் தொடங்கி பல்வேறு விதமான இசை, நடன பேண்ட்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு கிடைத்த பேரும் புகழும் போல் ஆசியாவின் கொரிய பாப் பேண்டான கே பாப் போன்ற பேண்ட்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை என்றே நான் சொல்வேன். மேலும் பிடிஎஸ் போன்ற கே பாப் மூலமாக மட்டுமே கலாச்சார சீரழிவுகள் ஏற்படுவது போல் கட்டமைப்புகள் அதிகம். அவை நிச்சயமாக இளைஞர்கள் மத்தியில் நல்லதும், கெட்டதுமாக நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மறுக்கவில்லை. ஆனால் ஏன் மேற்கத்திய பேண்ட்கள், பாப் குழுக்கள், நடனக் குழுக்கள் மீது இத்தகைய பிம்பங்கள் உருவாகவில்லை என்று கேள்வி எனக்குள் உண்டு.
பிடிஎஸ் ஆஸ்கர் மேடையிலும், கிராமி விருது மேடையிலும் வருவதற்காக கடுமையாக போராடியிருக்கிறார்கள். அது அவ்வளவு எளிதான கேக் வாக்காக அவர்களுக்கு அமைந்துவிடவில்லை. அதுபோலத்தான் டிஸ்னி, பிக்சார் அமிமேஷன்களுடன் போட்டிபோட்டு ஸ்டுடியோ கிபிலி அனிமேஷ் அடைந்திருக்கும் இடம் பிரம்மாண்டமானது. ஸ்டூடியோ கிபிலி அனிமேஷன்கள் மீது ஓவியங்கள் மீது ஆசிய ரசிகர்களின் உணர்வுப்பூர்மான பிணைப்பைத் தான் சாட் ஜிபிடி சீண்டியுள்ளது. அதுவும் இந்த எதிர்ப்புக்கான காரணங்களின் ஒன்று” என்றார்.
வெள்ளை மாளிகைக்கு பறந்த கடிதம்: இந்தப் பின்னணியில் அண்மையில் ஹாலிவுட் பிரபலங்கள், பால் மெக்கார்ட்னி, கேட் பிளான்சட், கில்லர்மோ டெல் டோரோ உள்ளிட்ட படைப்பாளர்கள், தங்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவியல் தொழில்நுட்ப கொள்கைத் துறைக்கு கடிதம் அனுப்பினர். “படைப்பாளர்களை, படைப்புகளை நசுக்கி அமெரிக்காவின் ஏஐ தலைமை வளரக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தனர். காப்புரிமைகள் பற்றியும் பேசியிருந்தனர். இப்போது ஸ்டூடியோ கிபிலி ஆர்ட்-ஐ சாட் ஜிபிடி உருவாக்கும் விஷயமும் காப்புரிமை சர்ச்சையை சந்தித்துள்ளது. அமெரிக்க பிரபலங்கள் நேரடியாக தம் அரசாங்கத்துக்கு கோரிக்கை வைக்க முடிகிறது. ஆனால், இன்று பாதிக்கப்பட்டுள்ள மியாஸிகியும் இனி இன்னும் பாதிக்கப்படப் போகும் உலகளாவிய கலைஞர்களும் எங்கே முறையிடுவது!?