நைப்பியிதோ: மியான்மரில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி காலை 11.50 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதன் தாக்கம் மியான்மரை ஒட்டியுள்ள தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது.
இதையடுத்து பகல் 12 மணி அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் மியான்மரில் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை இந்திய நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.
தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும்.
தாய்லாந்தில் பாதிப்பு: மியான்மரின் Monywa நகருக்கு கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நாட்டின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காகில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
சுமார் 17 மில்லியன் மக்கள் பாங்காகில் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர்கள் தங்கியுள்ளனர். நிலநடுக்க பாதிப்பு குறித்த எச்சரிக்கை வந்ததும் அனைவரும் படி வழியாக கீழே இறங்கி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.