நைப்பியிதோ: மியான்மரில் வெள்ளிக்கிழமை இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் தாக்கம், மியான்மருக்கு அருகில் உள்ள தாய்லாந்திலும் வெகுவாக உணரப்பட்டது. பாங்காகில் சில உயர்ந்த கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து ஆறு பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிலைமையை விரைவாக ஆராய்ந்து, மீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பினை நேரில் பார்த்த இருவர் அளித்த பேட்டியில், “நிலநடுக்கம் ஏற்பட்டபோது நாங்கள் மசூதியில் தொழுது கொண்டிருந்தோம். நிலநடுக்கத்தால் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்” என்று தெரிவித்தனர்.
இதனிடையே, நைப்பியிதோவில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்று ‘அவசர சிகிச்சை பிரிவு’ ஆக அறிவிக்கப்பட்டது. 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே காயம்பட்ட பலர் வரிசையாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மியான்மர் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் மீட்பு மற்றும் தேடுதல் பணியினைத் தொடங்கியுள்ளோம். யாங்கோன் பகுதியைச் சுற்றி உயிரிழப்புகள், சேதங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா எனப் பார்த்து வருகிறோம். இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
பாங்காங்கில் வானுயர்ந்த கட்டிடம் இடிந்தது: மியான்மருக்கு அருகே உள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நிலநடுக்கம் உணரப்பட்டபோது மக்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து வெளியேறி வந்தனர். அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பொதுப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் பாங்காங்கின் சாதுசாக் பகுதியில் 30 மாடி கட்டிடம் ஒன்று நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. இதில் 43 கட்டுமானத் தொழிலாளிகள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல் மேலும் சில கட்டிடங்களும் சரிந்து விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா நாட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளார். தலைநகர் பாங்காக் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் பாங்காக் ஆளுநர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சீனாவின் யுனான் மற்றும் ஷிசுயான் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள ருயிலி பகுதியில் நிலநடுக்கத்தால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது, சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சாத்தியமான உதவி செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி: “மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் உருவாக்கியிருக்கும் பாதிப்புகளை கேட்டு கவலையுற்றேன். அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக இறைவனை வேண்டுகிறேன். அனைத்து சாத்தியமான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது. இது தொடர்பாக தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுடன் தொடர்பில் இருக்கும் படி வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்காக பாங்காகில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. அவர்கள் ஏதாவது அவசரத் தேவைக்கு அந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.