சென்னை: மாநகரப் பகுதிகளில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு இடங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா (வேளச்சேரி) பேசும்போது, “சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சில இடங்கள், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக வரையறை செய்யப்படுவதால், அவற்றுக்கு பட்டாக்கள் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் இந்த பட்டா பிரச்சினைகள் நிலவுகின்றன. இதிலுள்ள சிக்கல்களை சரிசெய்து, அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.