மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் வீட்டின் மீது குண்டுவீச்சு: சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம்

மேற்குவங்கத்தில் பாஜக மூத்த தலைவர் அர்ஜுன் சிங்கின் வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

மேற்குவங்கத்தின் ஜகத்தால் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் சிங். முன்னாள் எம்பியான இவர் பாஜகவின் மூத்த தலைவராக விளங்குகிறார். கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ஜகத்தாலில் உள்ள இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து அர்ஜுன் சிங் கூறியதாவது: திரிணமூல் கவுன்சிலர் சுனிதா சிங்கின் மகன் நமித் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் எனது வீட்டின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். சிசிடிவி ஆதாரங்களை அளித்துள்ளேன். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் அளித்த என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக எனக்கு சம்மனும் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அர்ஜுன் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜகத்தால் தொகுதி எம்எல்ஏவும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோம்நாத் ஷியாம் கூறும்போது, “ஜகத்தால் பகுதியில் உள்ள கருப்பு ஆலையில் அர்ஜுன் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் ஓர் இளைஞர் காயமடைந்து உள்ளார். அங்கு திரிணமூல் தொண்டர்கள் விரைந்து வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் அர்ஜுன் சிங் தப்பியோடிவிட்டார். ஆனால் தனது வீட்டின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடந்ததாக அவர் பொய் குற்றசாட்டை சுமத்துகிறார்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பாஜக, திரிணமூல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு இருப்பதால் ஜகத்தால் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. சம்பவ பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இரு தரப்பினரிமும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.