மாஸ்கோ,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் நடந்து வரும் சூழலில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவது பற்றிய தகவலை அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி செர்கே லாவ்ரவ் இன்று கூறியுள்ளார்.
ரஷியா மற்றும் இந்தியா: ஒரு புதிய இருதரப்பு செயல் திட்டம் என்ற பெயரிலான மாநாட்டில் காணொலி காட்சி வழியே ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கே லாவ்ரவ் இன்று பேசினார். அப்போது, ரஷிய அதிபரின் வருகைக்கான ஏற்பாடுகளை இந்தியா செய்து வருகிறது.
இந்த மாநாட்டை ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ரஷிய சர்வதேச விவகாரங்களுக்கான கவுன்சில் ஆகியவை கூட்டாக இணைந்து நடத்துகிறது என்றார்.
2024 மக்களவை தேர்தலில் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதன்முறையாக ரஷியா சென்ற பிரதமர் மோடி விடுத்த அழைப்பையேற்று புதின் இந்தியாவுக்கு வருகை தருவார். அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன என்று அவர் கூறினார்.
இதேபோன்று, வருகிற மே 9-ந்தேதி மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறும் கிரேட் பேட்ரியாட்டிக் என்ற போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செல்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான உறுதியை பல்வேறு நாடுகளும் வழங்கியுள்ளன என்றும் லாவ்ரவ் கூறியுள்ளார்.