வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: பாஜக வெளிநடப்பு

மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தீர்மானம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தும் அரசினர் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அவர் பேசியதாவது:

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு இந்தியா. பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு, வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்தாலும், அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இதே உணர்வை கொண்டதாகத்தான் செயல்பட வேண்டும்.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு, தனது அனைத்து செயல்பாடுகளையும் ஒருவித உள்நோக்கத்துடனே செய்து வருகிறது. எதை செய்தாலும், குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையிலேயே திட்டங்களை தீட்டுகின்றனர். சிறுபான்மை முஸ்லிம் மக்களையும், இலங்கை தமிழர்களையும் குடியுரிமை திருத்த சட்டம் வஞ்சித்தது. இந்தியை திணித்து, இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது. நீட் மற்றும் தேசிய கல்வி கொள்கை அடித்தட்டு மக்களை பாதிப்பதாக அமைந்துள்ளன. இந்த வரிசையில் கொண்டு வரப்படும் வக்பு வாரிய சட்ட திருத்தம், சிறுபான்மை முஸ்லிம் மக்களை வஞ்சிப்பதாக உள்ளது. இதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்தது. இந்த சட்ட திருத்தங்கள் வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருந்ததால், திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தோம். இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அதை அனுப்பினர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை கூட்டுக் குழு நிராகரித்துள்ளது. இந்த குழுவின் முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் எந்த நேரத்திலும் தாக்கல் செய்யப்படலாம். இந்த சட்டம் வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும். எனவே, முஸ்லிம் மக்களை வஞ்சிக்கும் இந்த சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம். மத நல்லிணக்கம் மற்றும் அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாக கொண்டு நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியதும் அவசியமாகிறது.

தீர்மான விவரம்: ‘இந்திய திருநாட்டில் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அதை பேணிக் காக்கும் கடமை அரசுகளுக்கு உள்ளது. ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின முஸ்லிம் மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு வாரிய சட்டத்தை திருத்துவதற்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது’ என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதையடுத்து, தீர்மானத்தின்மீது உறுப்பினர்கள் பேசினர். அதன் விவரம்: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: வக்பு வாரிய சட்ட திருத்தம், அடிப்படையை தகர்ப்பதாக, வாரியத்தின் நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது. வக்பு வாரிய சொத்துகளை அபகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அதிமுக சார்பில் அரசு தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா: முஸ்லிம் சமுதாயத்தின் குமுறல்களை எடுத்துரைக்கும் வகையில் தமிழக அரசின் தீர்மானம் இருப்பது வரவேற்கத்தக்கது. வக்பு வாரிய சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதில் 44 திருத்தங்கள் செய்யப்பட்டதாக கூறுகின்றனர் ஆனால், 115 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வக்பு வாரிய சொத்துகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நீர்த்துப்போக செய்வதே இந்த சட்ட திருத்தத்தின் நோக்கம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

தொடர்ந்து, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், தீர்மானம் தொடர்பான தனது எதிர்ப்பை பதிவுசெய்தார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, மமக தலைவர் ஜவாஹிருல்லா, விசிக உறுப்பினர் ஷா நவாஸ் பேசினர். இதையடுத்து, தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து, அசன் மவுலானா (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஈஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் அரசின் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.

‘அமித் ஷாவிடம் பேசுங்கள்’ -இபிஎஸ்-க்கு முதல்வர் வேண்டுகோள்

சட்டப்பேரவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதும், உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

அவர் பேசும்போது, ‘‘வக்பு மசோதாவுக்கு எதிரான அரசினர் தனி தீர்மானத்தை பாஜக தவிர அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரித்துள்ளீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபோது, தமிழகத்தின் இருமொழி கொள்கை பற்றி பேசியதற்கு நன்றி. அதேபோல, அடுத்த முறை அமித் ஷாவை சந்திக்கும்போது வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம் குறித்தும் பேச வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.