ஒரே எண்ணில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள பிரச்சினையை அரசு விவாதிக்க மறுப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் உ.பி.யை சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் கூறினார். இதன் மூலம் போலி வாக்காளர்கள் மற்றும் வெளி மாநில வாக்காளர்கள் மேற்கு வங்கத்தில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், “இவை போலி வாக்காளர் அட்டை அல்ல. எண் ஒன்றாக இருந்தாலும் தொகுதி, வார்டு எண் உள்ளிட்ட விவரம் வெவ்வேறாகவே இருக்கும். எனினும் இந்தப் பிரச்சினைக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்” என்று கூறியது.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சாகரிகா கோஷ் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூறுகையில், “ஒரே எண்ணில் வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ள பிரச்சினையை அவையில் விவாதிக்க அனுமதிப்பதாக அவைத் தலைவர் முன்பு உறுதி அளித்திருந்தார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக நாங்கள் நோட்டீஸ் கொடுத்து வருகிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணம் கூறி அனுமதி மறுக்கப்படுகிறது. இது ஒரு தீவிரமான பிர்ச்சினை. இது நியாயமான தேர்தலை பற்றியது. ஒட்டுமொத்த நாடும் இதுபற்றி கவலைப்படுகிறது. இதனை விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரச ஏற்க மறுக்கிறது” என்றார்.