CSK vs RCB Today Match : ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடக்க உள்ளது. எம்எஸ் தோனி, விராட் கோலி எதிரெதிர் துருவங்களாக விளையாடக்கூடிய போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும் போட்டியின் அனைத்து சூழல்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏனென்றால் ஆர்சிபி அணியின் வீக் பாயிண்ட் சிஎஸ்கே அணிக்கு நன்றாகவே தெரியும். அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சிஎஸ்கே – ஆர்சிபி இதுவரை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி. ஆனால் ஆர்சிபி அணி இதுவரை ஒரே ஒருமுறைகூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இதுவே இரண்டு அணிகளின் தரத்தை தெளிவாக சொல்லிவிடும். ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 33 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. அதில் சிஎஸ்கே அணி 21 முறை வெற்றி பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 முறை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
சென்னை அணி பிளேயிங் லெவன்
சென்னை அணி எப்போதும் பிளேயிங் லெவனை கச்சிதமாக களமிறக்கும். மூன்று பேட்ஸ்மேன்கள், ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர், ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர், இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு முழுநேர சுழற்பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், இரண்டு மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என பிளான் செய்து அணியை கட்டமைத்திருக்கும். அதனாலேயே அந்த அணி ஐபிஎல் தொடரில் இத்தனை ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. பேட்டிங், பவுலிங்கில் சரியான யூனிட்டாக அந்த அணி இருக்கும். இந்த ஆண்டும் அதே பாணியிலேயே பிளேயிங் லெவன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால், எப்படியான சூழலையும் சென்னை அணி தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும். இதுவே அந்த அணியின் வெற்றியின் ரகசியமாக உள்ளது.
ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம்
ஆர்சிபி அணியை பொறுத்தவரை பிரபலமான பிளேயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிளேயிங் லெவனை கட்டமைக்கும். ஆனால் சென்னை அணி தங்கள் வைத்திருக்கும் பார்முலாவுக்கு சூட்டாகும் பிளேயர்களை தவிர்த்து மற்ற பிளேயர்களை எப்போதும் அணிக்குள் கொண்டு வர மாட்டார்கள். வெளியில் உட்கார வைக்கப்படும் பிளேயர் எவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு இல்லை. அந்த சூழல் ஆர்சிபி அணியில் இல்லை. ஆனால் அந்த அணுகுமுறையில் இந்த ஆண்டு கொஞ்சம் மாற்றிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
சிஎஸ்கே அணி வெற்றி பெறும் ஏன்?
இருப்பினும் இன்றைய சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. காரணம், சேப்பாக்கம் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானம். மேலும், பிளேயிங் லெவனை சரியாக கட்டமைத்திருக்கிறார்கள். இதுவே சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலம். அந்தவகையில் பார்க்கும்போது பேட்டிங்கில் மட்டுமே வலுவான அணியாக ஆர்சிபி தெரிகிறது. அதனால் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெறும் என சொல்லியிருந்தோம். அதைப் போலவே சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டியின் முடிவை பொறுத்திருந்து பார்க்கலாம்.