‘சென்னை தோல்வி!’
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களுரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 17 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் தோற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

ருத்துராஜ் கெய்க்வாட் பேசியதாவது, ‘இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு அவ்வளவு சாதகமானது இல்லை. 170 ரன்கள்தான் இங்கே சரியான ஸ்கோர் என நினைக்கிறேன். கூடுதலாக 20 ரன்களை சேர்த்து சேஸ் செய்யும்போது எங்களின் அணுகுமுறையையே மாற்ற வேண்டியிருக்கிறது. பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. பந்து பேட்டுக்கு அவ்வளவாக வரவில்லை.
ராகுலும் நானும் எங்களின் வலுவான ஷாட்களைத்தான் ஆடினோம். சில நாட்களில் அவை நமக்கு சாதகமாக அமையாது. போட்டியின் முக்கியமான தருணங்களில் கேட்ச்களை ட்ராப் செய்தோம். கேட்ச்கள் ட்ராப் ஆன உடனேயே பவுண்டரியும் சிக்சர்களும் சென்றது. அதுதான் எங்களுக்கு பிரச்சனையாக அமைந்தது. அவர்களின் இன்னிங்ஸில் ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் மொமண்டம் கிடைத்துக் கொண்டே இருந்தது.

ஆனாலும், 50 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கிறோம். அடுத்தப் போட்டியில் கவுஹாத்தி செல்ல வேண்டும். நீண்ட நேரப் பயணம் மேற்கொள்ள வேண்டும். மனரீதியாக நாங்கள் அடுத்தப் போட்டிக்குத் தயாராக வேண்டும்.’ என்றார்.