RCB vs CSK Head to Head : ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 2வது வெற்றியை தீர்மானிக்கும் போக போட்டியாக சேப்பாக்கத்தில் நடக்கும் இன்றைய மோதல் இருக்கப்போகிறது. அதேநேரத்தில் ஆர்சிபி அணிக்கு ஒரு மிகப்பெரிய வரலாற்று சோதனை துரத்திக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அந்த அணி வீழ்த்தி 17 ஆண்டுகள் ஆகிறது. ஆம், ஐபிஎல் தொடங்கிய முதல் ஆண்டில் ஒரு போட்டியில் இந்த மைதானத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன்பிறகு நடந்த எஞ்சிய 8 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாகை சூடியிருக்கிறது. இப்படியொரு மோசமான சாதனைக்கு ஆர்சிபி இன்றாவது முற்றுப்புள்ளி வைக்குமா? என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கும் இடையே மொத்தம் 33 போட்டிகள் இதுவரை நடந்துள்ளன, அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதிலும் சிஎஸ்கே அணியே முன்னிலையில் இருக்கிறது. ஆனால் ஆர்சிபி அணிக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கையளிக்கும் விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த கடைசி போட்டியில் ஆர்சிபி அணியே வெற்றி வாகை சூடியது. அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்தது. அந்த நம்பிக்கையோடு இன்று விராட் கோலி படை தோனி படையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியுடன் உள்ளது. இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும். குறிப்பாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.