The Door Review: அதே பழிக்குப் பழி வாங்கும் ஹாரர் சினிமா! பாவனாவின் தமிழ் கம்பேக் கவனம் பெறுகிறதா?

கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா, தனது புதிய புராஜெக்ட் ஒன்றினைக் கட்டுவதற்காக அந்நிலத்திலிருக்கும் புராதன கோயில் ஒன்றை இடிக்கிறார்.

அதைத் தொடர்ந்து மதுரையில் வக்கீலாக இருக்கும் அவரின் தந்தை பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அமானுஷ்யமான முறையில் இறந்துபோகிறார்.

அதே புராஜெக்ட்டின் கட்டுமான பணிகளில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு தற்கொலைகளும் நிகழ்கின்றன. பாவனாவும் அவரின் நண்பரும் தங்கியிருக்கும் வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.

இதற்கு பின்னாலுள்ள மர்மத்தைப் பாவனா & டீம் கண்டறிந்ததா என்பதே ‘தி டோர்’ படத்தின் கதை.

The Door Review

வெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் பாவனா. முழுப் படத்தின் பொறுப்பும் இவரிடமே இருக்க, அதை ஓரளவு காப்பாற்ற முயன்றிருக்கிறார்.

அவரது வீட்டு நண்பராக வரும் சிந்தூரி, ‘சிடு மூஞ்சி’யாகவே படம் முழுக்க வருவது ஆரம்பத்தில் மிகை நடிப்பாகத் தெரிந்தாலும், போகப்போகப் பழகிவிடுகிறது. சாதாரண காட்சியில் கூட தத்துவப் பேராசிரியர் போலப் பேசி, செயற்கைத் தனத்தை வாரி வழங்குகிறார் கணேஷ் வெங்கட்ராமன்.

அமானுஷ்யத்திலும் எனர்ஜி என்ற அறிவியல் இருக்கிறது என்ற அரிய வகைக் கண்டுபிடிப்புகளைப் பேசும் வேடத்தில் ரமேஷ் ஆறுமுகம், குறை சொல்ல முடியாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இதுதவிர, வந்து போகும் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் படத்தோடு ஒன்றிய நடிப்பைக் கொடுக்கவில்லை. அவர்களின் டப்பிங்கிலும் துல்லியம் மிஸ்ஸிங்!

பேய்ப் படத்தின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய பின்னணி இசை ஏரியாவில் வருண் உன்னியின் பங்களிப்பு சுமாராகவே இருக்க, பதற்றத்தைத் தர வேண்டிய சவுண்ட் எஃபெக்ட்ஸ் பல இடங்களில் மியூட் மோடில் காணாமல் போயிருக்கின்றன.

The Door Review

கொடைக்கானல், சில இரவு நேர ஷாட்ஸ் ஆகிய பகுதிகளில் மட்டும் கவனிக்க வைக்கும் ஒளிப்பதிவாளர் கௌதம்.ஜி, மற்ற இடங்களில் அதைத் தராமல் கதவைப் பட்டெனச் சாத்திவிடுகிறார்.

‘அடுத்து என்ன?’ என்பதை எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதைக்கு, ரிப்பீட் மோடில் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அதுல் விஜய். இத்தனை விளக்கங்கள் தேவையா ப்ரோ?!

கதை ஆரம்பித்த விதமே ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தாலும், தெளிவான ஸ்டேஜிங் இல்லாததால் படத்தோடு ஒன்ற முடியாத சூழல் உருவாகிறது.

பாவனா, கட்டுமானம் குறித்துப் பேசும் சில இடங்கள் எல்லாம் ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் பார்க்கும் உணர்வையே கொடுக்கின்றன. இருப்பினும், கெஸ்ட் ஹவுஸில் வரும் சில ஹாரர் காட்சிகள் ‘பேய்ப் படம்’ என்ற மீட்டரைச் சற்றே தொட்டுச் செல்கின்றன.

The Door Review
The Door Review

இரண்டாம் பாதியை ஹாரர் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராகக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற இயக்குநர் ஜெய்யத்தேவாவின் ஐடியா சற்று சுவாரஸ்யத்தைத் தருகிறது.

இருப்பினும், விசாரணைக்கு உதவும் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ், மீடியா தோழி, அவருடன் ஷோ செய்யும் பாராநார்மல் நிபுணர் ஆகிய கதாபாத்திர வடிவமைப்புகளில் செயற்கைத் தனமே வியாபித்திருக்கிறது.

இது படைப்பின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, லாஜிக் மீறல்களைக் குறிப்பிட அடிஷ்னல் ஷீட்டைக் கேட்க வைக்கின்றன. பேயின் பிளாஷ்பேக் பகுதியும் 20 வருடங்களுக்கு முன்பு சுட்ட வடையாக நூல் விடுகிறது.

The Door Review
The Door Review

கிராபிக்ஸ் காட்சிகள், பேய்க்கான மேக்கப் ஆகியவை ஆரம்பக்கட்ட நிலையிலேயே இருக்கின்றன. அதனாலேயே படம் தர வேண்டிய பயமோ, பதற்றமோ எந்த டோருக்குப் பின்னால் தேடியும் காணவில்லை.

கதை, திரைக்கதை, தொழில்நுட்பம் என அனைத்து ஏரியாக்களிலும் கதவை மூடும் இந்த ‘தி டோர்’, செம போர்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.