மேற்காசிய நாடுகளுடனான மோதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்தார் விருந்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது: முஸ்லிம்களின் நலனுக்கான செயல்பாடுகளில் எனது நிர்வாகம் எப்போதும் அவர்களுடன் கைகோத்து நிற்கும். அத்துடன் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரும் வகையில் ராஜதந்திர ரீதியில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும்.
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் சமூகத்தினர் பெருமளவில் ஆதரவளித்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல சவால்கள் இருப்பினும் அவர்களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். பைடன் நிர்வாகத்தால் செய்ய முடியாத காரியங்களை நான் செய்ய தொடங்கி விட்டேன். எல்லோருக்கும் தேவை தற்போது அமைதி மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுடன் ட்ரம்ப் முதன் முதலாக இப்தார் விருந்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.