சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் விதமாக கல்வி, திறன் மேம்பாடு, வீட்டுவசதி, உட்கட்டமைப்பு போன்றவற்றுக்காக தனித்துவமான திட்டங்களை வகுத்தும், செயல்படுத்தியும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு மேற்கொண்டுவரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டைவிட இந்தாண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021-ல் 445-லிருந்து 2024-ல் 368 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்படும் தீருதவித் தொகை, ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக மாநில நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 421 பேருக்கு வேலைவாய்ப்பு, 649 பேருக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளன. தீருதவித் தொகையாக ரூ.207.26 கோடி 17,098 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், புதிய முயற்சியாக, வன்கொடுமைகள் குறித்த புகார் தெரிவிப்பது உள்ளிட்டவற்றுக்காக தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்துக்கு வந்த 5,191 மனுக்களில் 4,038 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொதுப்பிரிவினரின் கல்வியறிவு 80.09 சதவீதமாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு 73.26 சதவீதமாகவும் உள்ளது. கல்வி அறிவை உயர்த்தும் பொருட்டு இந்தத் துறையின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.3,798 கோடியில், கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ரூ.2,798 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் 468 பயனாளிகளுக்கு ரூ.89.71 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. ‘நன்னிலம்’ எனும் ஆதிதிராவிடர் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தில், 2 ஆண்டுகளில் 625 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி மானியம் வழங்கப்பட்டு, மகளிர் நில உரிமையாளர்களாக மாறியுள்ளனர். தாட்கோ மூலம், பெண்களின் வாழ்வாதாரத்துக்கான மானியம் 140 பயனாளிகளுக்கு ரூ.8.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், கடந்த 2023-24-ல் ரூ.200 கோடியில், 1,690 உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், 2024-25-ல் ரூ.230 கோடியில், 1,966 மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது இத்திட்டத்துக்கு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் வாழ்வாதார திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி மதிப்பில் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முன்னேற்றத்துக்காக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 2,066 தொழில் முனைவோருக்கு ரூ.243 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதில், 400 மகளிர் தொழில்முனைவோர் ரூ.41.87 கோடி மானியம் பெற்றுள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கோ.வி.செழியன், சி.வி.கணேசன் மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், ஜி.செல்வம், திருமாவளவன், ராணி ஸ்ரீகுமார் மற்றும் தலைமைச்செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.