‘இந்திய வங்கித் துறையின் நெருக்கடிக்கு பாஜக அரசு வழிவகுத்தது எப்படி?’ – ராகுல் காந்தி விவரிப்பு

புதுடெல்லி: இந்திய வங்கித் துறையை பாஜக அரசு நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. இது இளம் பணியாளர்களை அழுத்தத்துக்கும், நெருக்கடியான பணிச் சூழலுக்கும் உள்ளாக்கியுள்ளது” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் உடனான தனது சந்திப்பு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக அரசு தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. குழுச் சார்பு சதி மற்றும் தவறான நிர்வாக மேலாண்மை இரண்டும் இணைந்து இந்திய வங்கித் துறையை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்தச் சுமை இறுதியில் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளைத் தாங்கும் இளம் பணியாளர்கள் மீதே திணிக்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை நாடாளுமன்றத்தில் சந்தித்தது. அவர்களின் கதைதள், பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிட மாற்றம், என்ஏபி மீறியவர்களுக்கு நெறிமுறையற்று வழங்கப்பட்ட கடன்களை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கல் நடவடிக்கை, உரிய நடைமுறையை பின்பற்றாமல் பணிநீக்கம் என பல வடிவங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் இரண்டு துயரச் சம்பவங்களால் தற்கொலைகளும் நடந்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சி அரசின் தவறான பொருளாதார மேலாண்மையானது உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளது. இது நாடு முழுவதும் நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களை கவலைக்குள்ளாக்கும் விஷயமாகும். தொழிலாளர் வர்க்கத்தினருக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சி இந்த விவகாரங்களை முழு வீச்சில் கையிலெடுத்து, பணியிட துன்புறுத்தல் மற்றும் சுரண்டல்களை எதிர்த்து இறுதி வரை போராடும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், “நீங்களும் இதேபோன்ற அநீதியைச் சந்தித்த தொழிலாளியாக இருந்தால் உங்ளின் கதை என்னுடன் பகிரிந்து கொள்ளுங்கள்” என https://rahulgandhi.in/awaazbharatki என்கிற இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, ஐசிஐசிஐ வங்கியால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் குழு ஒன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தது. அப்போது அவர்கள் மருத்துவ விடுப்பில் இருந்தபோது, நிர்வாக நடைமுறைகள் குறித்த கவலைகளை வெளிப்படுத்தியதற்காக திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.