மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோவை சிவசேனாவினர் அடித்து உடைத்தனர். இவ்விவகாரத்தில் குணால் கம்ரா மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி இரண்டு முறை சம்மன் அனுப்பி இருக்கின்றனர். ஆனால் அவரைக் கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. இதையடுத்து அவரை உடனே கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் மும்பைக்கு வராமல் தொடர்ந்து வெளியில் தங்கி இருக்கிறார்.

இது குறித்து சிவசேனா அமைச்சர் சம்புராவ் தேசாய் கூறுகையில், ”அமைதியாக இருக்கும்படி ஷிண்டே எங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அமைதியாக இருக்கிறோம். குணால் கம்ரா எங்கு மறைந்திருந்தாலும் அவரை எப்படி இழுத்து வரவேண்டும் என்று சிவசேனா தொண்டர்களுக்குத் தெரியும்.
நான் அமைச்சர் என்பதால் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்காக எங்களது பொறுமையை சோதிக்கவேண்டாம். அவர் எங்கிருந்தாலும் அவரைப் பிடித்து வந்து அவருக்குத் தண்டனை கொடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் குணால் கம்ரா மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குணால் கம்ராவிற்கு நாடு முழுவதும் ஆதரவும் பெருகி இருக்கிறது.
அவர் மீது மகாராஷ்டிரா அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்த உலகம் முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் குணால் வங்கிக் கணக்கிற்கு தொடர்ந்து நேரடியாக பணம் அனுப்பி வருகின்றனர். இது வரை 5 கோடி ரூபாய் வரை அவரது வங்கிக் கணக்கிற்கு பணம் வந்திருக்கிறது.
குணால் கம்ரா 2013ம் ஆண்டில் இருந்து மேடை காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொடர்ந்து காமெடி மூலம் அனைவரையும் விமர்சித்து வருகிறார். அவர் கொலை மிரட்டல்களை இதற்கு முன்பும் எதிர்கொண்டிருக்கிறார். 2020ம் ஆண்டு பத்திரிகையாள்ர் அர்னாப் கோஸ்வாமியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தபோது அவருடன் குணால் பேச முயன்றார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் குணால் தங்களது விமானத்தில் பறக்க தடை விதித்தது.