புதுடெல்லி,
டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போா் பட்டியல் டிக்கெட்டை வாங்கியவா்கள், இருக்கை உறுதியாகாத நிலையில் ரெயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்யவேண்டிய நிலை குறித்து மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி. மேதா விஷ்ரம் குல்கா்னி கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என்று தெரிவித்தார்.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.