மாஸ்கோ: கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஆர்க்டிக் பிராந்தியத்துக்கு வடக்கே உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான முர்மான்ஸ்க்குக்கு பயணம் மேற்கொண்ட விளாடிமிர் புதின், அங்கு நடந்த ரஷ்யாவின் ஆர்க்டிக் மன்றத்தில் பேசும்போது, “ஆர்க்டிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி தீவிரமடைந்து வருகிறது. கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்பின் திட்டம் அதற்கு ஒரு முக்கிய உதாரணம்.
கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்காவின் திட்டங்கள் தீவிரமானவை. இந்தத் திட்டங்கள் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளன. மேலும் அமெரிக்கா ஆர்க்டிக் பிராந்தியத்தில் அதன் புவிசார் மூலோபாய, ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை முறையாகத் தொடரும் என்பது தெளிவாகிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் இது.
கிரீன்லாந்தைப் பொறுத்தவரை இது இரண்டு குறிப்பிட்ட நாடுகளுக்கு (அமெரிக்கா மற்றும் டென்மார்க்) இடையேயானது. இதற்கும் ரஷ்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று கூறினார்.
புதினின் இந்த உரை, சர்வதேச அளவில் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. புவிசார் அரசியல் மற்றும் ராணுவ வல்லுநர்கள் இதை, ரஷ்யாவும் அமெரிக்காவும் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சி என்கின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், மாஸ்கோ மீதான வாஷிங்டனின் கண்ணோட்டத்தையும் நிலைப்பாட்டையும் முற்றிலுமாக மாற்றியுள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக உக்ரைன் குழப்பத்தில் உள்ளது. ஐரோப்பிய தலைவர்கள் பதட்டத்துடனும் கவலையுடனும் அடிக்கடி பிரான்சில் கூடி, வாஷிங்டனுக்கு மாற்று குறித்து சிந்தித்து வருகின்றனர்.
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் குறித்த புதினின் நிலைப்பாடு, உக்ரைனுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உக்ரைனின் பல பகுதிகளை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள ரஷ்யா, அதை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்ளாது.
வழக்கமாக ஒருவரையொருவர் விமர்சிப்பதற்குப் பதிலாக, ரஷ்யாவும் அமெரிக்காவும் தற்போது ஒருவருக்கொருவர் மென்மையாகவும், சில சமயங்களில் சில விஷயங்களில் உடன்பாடாகவும் உள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் நடந்து கொண்ட விதத்தை ட்ரம்ப்பும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸூம் கடுமையாக விமர்சித்த நிலையில், அமெரிக்கத் தலைமையின் உணர்வுகளை ரஷ்யத் தலைவர்கள் பிரதிபலிக்கின்றனர்.
வெளிநாட்டு முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அதிபர் புடினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில துறைகளில், அமெரிக்காவுடன் கூட்டாகச் செய்யக்கூடிய பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆர்க்டிக்கில் முதலீட்டு ஒத்துழைப்புக்கு நாங்கள் திறந்திருக்கிறோம். அது தளவாடங்களாகவோ அல்லது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் நன்மை பயக்கும் பிற துறைகளாகவோ இருக்கலாம். இதுபோன்ற ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கு முன்பு, உக்ரைனில் போர் முடிவுக்கு வர வேண்டும்.
நாங்கள் (ரஷ்யாவும்,அமெரிக்காவும்) இப்போது ஒரு நல்ல உரையாடலைக் கொண்டுள்ளோம். மேலும் அமெரிக்கா ரஷ்யாவின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இது கனிம வளங்களும் இயற்கை வளங்களும் நிறைந்த ஆர்ட்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒத்துழைத்துச் செயல்பட முடியும் என்ற கருத்தை மாஸ்கோ ஊக்குவிப்பதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கிரீன்லாந்து “விற்பனைக்கு இல்லை” என்று அதன் பிரதமர் தெரிவித்துள்ளார். “சமீப காலம் வரை, எங்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருந்த அமெரிக்கர்களை நாங்கள் நம்பினோம். அவர்களுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்றி மகிழ்ந்தோம். ஆனால் அந்த காலம் முடிந்துவிட்டது.” என்று கிரீன்லாந்தின் பிரதமர் மியூட் எகெட் கூறினார்.