சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 29, 2025) நடந்த மோதலில், பாதுகாப்புப் படையினர் 16 மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக் கொன்றனர். இந்த மோதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.
சுக்மா மாவட்டத்தின் கேரளபால் காவல் நிலையப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று தொடங்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “சுக்மா மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் காவல் படையின் கூட்டுப் படையினர் ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. காலை 10 மணியளவில், சுக்மாவில் 16 மாவோயிஸ்ட்களின் உடல்கள் மீட்கப்பட்டன. என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து ஏகே 47, எஸ்எல்ஆர், ஐஎன்எஸ்ஏஎஸ் ரைபிள், ராக்கெட் லாஞ்சர், பிஜிஎல் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்த மோதலில் இரண்டு டிஆர்ஜி வீரர்களும் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களின் நிலை சாதாரணமானது; அவர்கள் ஆபத்தில் இல்லை.” என்று கூறினார். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த பத்து நாட்களில் இது இரண்டாவது பெரிய என்கவுன்டர் ஆகும். மார்ச் 20 அன்று, பிஜாப்பூர்-தந்தேவாடா பகுதியில் 26 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பிஜாப்பூர், சுக்மா மற்றும் தண்டேவாடா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் குறைந்தது 116 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.