பெய்ரூட்,
சிரியாவில் 54 ஆண்டு கால ஆசாத் குடும்ப ஆட்சி, கடந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. முன்னதாக சிரியாவில் சுமார் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், சிரியாவின் ஆசாத் அரசாங்கத்துடன் இணைந்து போரிட்டு வந்தனர்.
ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல்-காசா போரில் காசாவிற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.
இந்த மோதல் காரணமாக ஹிஸ்புல்லா அமைப்பு தற்போது பலவீனமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், லெபனான்-சிரியா எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சிலர் எல்லை தாண்டி வந்து, தங்கள் நாட்டை சேர்ந்த 3 ராணுவ வீரர்களை கடத்திச் சென்று கொலை செய்ததாக சிரியாவின் இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியது.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஹிஸ்புல்லா அமைப்பு, கொல்லப்பட்ட 3 பேரும் சட்டவிரோத கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று கூறியது. அதே சமயம், லெபனானை சேர்ந்த 7 பேர் சிரியாவால் கொலை செய்யப்பட்டதாகவும், 52 பேர் படுகாயமடைந்ததாகவும் ஹிஸ்புல்லா தரப்பு குற்றம் சாட்டியிருந்தது.
இந்த சூழலில், லெபனான்-சிரியா எல்லையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகள் இருநாட்டு அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சவுதி அரேபியாவின் ஜிட்டா நகரில் நடந்த பேச்சுவார்த்தையில் லெபனானின் பாதுகாப்புத்துறை மந்திரி மெனாசா மற்றும் சிரியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி அபு காஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது சிரியா, லெபனான் இடையே எல்லை வரையறை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் லெபனான்-சிரியா எல்லையில் நிலவி வரும் பதற்றம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.