சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பெய்ஜிங்கில் நேற்று சந்தித்துப் பேசினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த வியாழக்கிழமை சீனாவுக்கு சென்றார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை, முகமது யூனுஸ் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக நீர்வளம் சார்ந்த தொழில்நுட்பங்களை வங்கதேசத்துக்கு வழங்க சீனா உறுதி அளித்திருக்கிறது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் வங்கதேசம் இணைந்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் சீனா, வங்கதேசம் இடையே சாலைகள், ரயில், கடல் வழி போக்குவரத்தை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதி மேற்கொண்டன.
அரசியல் குழப்பம்: ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வங்கதேசத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை எதிர்த்து போராடிய மாணவர் அமைப்புகள் தரப்பில் தேசிய மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் அவாமி லீக் தலைவர்கள் மீண்டும் தலைதூக்கி வருகின்றனர்.
வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உறவினர் ஆவார். அவரை மாற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு திரைமறைவில் காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் கடந்த 24-ம் தேதி மூத்த தளபதிகளுடன் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பொருளாதார நெருக்கடி: வங்கதேச பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஜவுளி துறை விளங்குகிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்த நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய ஜவுளி ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. அந்த ஆலைகளில் பணியாற்றிய லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் வங்கதேச பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவின் உதவியை முகமது யூனுஸ் நாடியுள்ளார். இதன்படி வங்கதேச ஜவுளி துறையில் சீன நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றன. இதேபோல பாகிஸ்தான் உடனும் முகமது யூனுஸ் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். வங்கதேச அரசின் நடவடிக்கைகளை இந்திய உளவுத் துறை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.