சென்னை: மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வி கட்டண நிர்ணயக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த 2022-23, 2023-24 மற்றும் 2024-25 கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து கல்வி கட்டணக் குழு கடந்த 2022 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி கல்வி கட்டணக்குழு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது, என வாதிட்டார்.
பதிலுக்கு அரசு தரப்பில், கல்வி கட்டணக்குழு அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை, என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் கடந்த 2022 முதல் 2025 வரையிலான குறிப்பிட்ட கல்வியாண்டுகளுக்கு ஏற்கெனவே நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணத்தை, கட்டண நிர்ணயக்குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக தற்போதுள்ள விலைவாசி உயர்வு மற்றும் பிற இதர செலவினங்களையும் கருத்தில் கொண்டு சுயநிதி கல்லூரிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.