Chennai Super Kings vs Royal Challengers Bengaluru: கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பழைய வீரர்களை முடிந்தவரை ரீடைன் செய்தது. ஏலம் முடிந்த போது சென்னை அணியில் பவர் ஹிட்டர்கள் இல்லை என்ற பேச்சு நிலவியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி அமைந்துள்ளது. 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே அடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தாலும் இந்த தோல்வி சென்னை அணி மீதான கேள்விகளை அதிகப்படுத்தி உள்ளது.
பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீக்காக உள்ளது. ரச்சின் ரவீந்தரா மிகவும் நிதானமாக ஆடி வருகிறார். டி20 போட்டிகளில் இந்த அணுகுமுறை எதிரணிக்கு சாதகமாக அமைந்து விடும். மறுபுறம் சென்னை அணியில் புதிதாக இணைந்துள்ள ராகுல் திருப்பாதி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இரண்டு போட்டிகளிலும் மிகவும் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இருவரும் ஃபீல்டிங்கிலும் அவ்வளவு சிறப்பாக இல்லை. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இணைந்துள்ள சாம் கர்ரன் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார். மறுபுறம் 9 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இணைந்துள்ள அஸ்வின் சென்னை மைதானத்திலேயே ரன்களை கசிய விடுகிறார். மேலும் சரியான நேரத்தில் விக்கெட்களையும் எடுத்துக் கொடுக்க முடியவில்லை.
உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள்
சென்னை அணிக்கு 2023 ஆம் ஆண்டு கோப்பையை வென்று தர முக்கிய காரணமாக இருந்தவர் டேவான் கான்வே. கடந்த இரண்டு போட்டிகளாக அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அடுத்த போட்டியில் சாம் கர்ரனிற்கு பதிலாக டேவான் கான்வே அணியில் இடம் பெற வேண்டும். அதேபோல தீபக் ஹூடா மற்றும் ராகுல் திருப்பாதிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் விஜய் சங்கர் இடம் பெறலாம். ஆல் ரவுண்டர் வேண்டுமென்றால் அன்சில் கம்போஜை கூட சில போட்டிகளில் விளையாட வைத்து பார்க்கலாம். இந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடிய வரும் நிலையில், சென்னை அணியும் அதேபோல ஒரு புதிய வீரருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை சிறப்பாக விளையாட வைக்கலாம்.
பவுலிங்கில் நூர் அகமது மற்றும் கலில் அகமதை தவிர வேறு யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை. ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் மிடில் ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர். எனவே அதனையும் சென்னை அணி விரைவாக சரி செய்ய வேண்டும். குறிப்பாக நேற்றைய போட்டியில் தோனி ஒன்பதாவது இடத்தில் களமிறங்கினார். கடைசி கட்டத்தில் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்த அவர் இன்னும் மேலே இறங்கி இருந்தால் டார்கெட்டை ஓரளவிற்கு எட்டி இருக்கலாம். அவருக்கு முன்னால் அஸ்வினை இறக்கியது எந்த அளவிற்கு சரியான முடிவு என்று பலரும் கேள்வி எழுப்ப வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டியில் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அடுத்தடுத்து போட்டிகளில் இந்த மாற்றங்களை செய்தால் சென்னை அணிக்கு சாதகமாக அமையும்.