உலக வங்கியுடன் இணைந்து ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0’ இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது துறைகள் மீதான மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
தமிழகத்தில் சுமார் 1.15 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை பெறுகின்றனர். கடந்த 19 மாதங்களில் மட்டும் ரூ.21,657 கோடிக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறாத தகுதி வாய்ந்த மகளிர், புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்தியாவிலேயே நம்பர்-1 இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த ஆட்சியில் இதுவரை மொத்தம் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில், விளையாட்டு வீரர்கள் யாருக்காவது போட்டிகளில் பங்கேற்க நிதி உதவி தேவைப்பட்டால், www.tnchampions.sdat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க சொல்லுங்கள். நிச்சயம் திறமைக்கு ஏற்ப, நிதி உதவி அளிக்கப்படும்.
சென்னை, மதுரையில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி ரூ.55 கோடி செலவில் நடத்தப்பட உள்ளது. இளைஞர்களிடம் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வட்டார, மாவட்ட அளவில் ரூ.45 கோடியில் முதல்வர் இளைஞர் விளையாட்டு திருவிழா நடத்தப்படும். மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் 25 ஆயிரம் வீரர்களுக்கு இந்த ஆண்டு முதல் காப்பீடு திட்டம் உருவாக்கப்படும்.
‘எலைட்’ திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை 25-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்படும். சென்னை வேளச்சேரி ஏஜிபி வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டு ஸ்குவாஷ் உலக கோப்பை, இ-ஸ்போர்ட்ஸ், ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப், ஆசிய இளையோர் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளும் நடத்தப்படும். வரும் நிதி ஆண்டில் 40 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கங்கள் (மினி ஸ்டேடியம்) ரூ.120 கோடியில் அமைக்கப்படும்.
இந்த ஆண்டில் உலக வங்கியுடன் இணைந்து ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0’ தொடங்கப்படும். கிராமப்புறத்தை சேர்ந்த 42 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.66 கோடியில் வழங்கப்படும். ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 2,500 புதிய சமுதாய திறன் பள்ளிகள் ரூ.25 கோடியில் உருவாக்கப்படும். சிறப்பு சுயஉதவி குழுக்களுக்கு ரூ.25 கோடி வாழ்வாதார நிதி, 6,000 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.90 கோடி சமுதாய முதலீட்டு நிதி, 15,000 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.22.50 கோடி சுழல் நிதி வழங்கப்படும். சென்னையை தொடர்ந்து 5 மண்டலங்களில் உணவு திருவிழா நடத்தப்படும். 100 சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு மின் ஆட்டோக்கள் வழங்கப்படும்.
‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ஷெல் நிறுவனம் மூலம் காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை மாவட்டங்களில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன கட்டமைப்புடன் கூடிய உயர் திறன் மையங்கள் அமைக்கப்படும். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூலம் 2 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஏஐ உயர்திறன் மையங்கள் நிறுவப்படும். இதன்மூலம் 25 ஆயிரம் பெண்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.
அரசு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த, தரவு சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் அரசுத் துறைகளில் பொருளியல், புள்ளியியல் பிரிவு அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.