சேப்பாக்கம் எங்களுக்கு ஹோம் கிரவுண்டே இல்லை – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளம்மிங்

Chennai Super Kings, Stephen Fleming : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், சேப்பாக்கம் மைதானம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு ஹோம் கிரவுண்டாக இல்லை என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரிய ஷாக்கை கொடுத்திருக்கிறது.

சிஎஸ்கே அணி தோல்வி

ஐபிஎல் 2025 தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வெள்ளிக்கிழமை இரவு மோதின. இப்போட்டியில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பானார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தையும், தோனி 9வது விக்கெட்டுக்கு பேட்டிங் இறங்கியதையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில் ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் வெற்றியை பெற்ற ஆர்சிபி அணி சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றைய போட்டியில் தான் இரண்டாவது வெற்றியை இந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக பெற்றது. இதனை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் கோபத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்டனர்.

ஸ்டீபன் பிளெம்மிங் விளக்கம்

சிஎஸ்கே அணியின் தோல்விக்குப் பிறகு அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, சேப்பாக்கம் மைதானம் கடந்த சில ஆண்டுகளாகவே எங்களுக்கு ஹோம் கிரவுண்ட் என்ற ஆதரவையும் வழங்குவதில்லை. இந்த மைதானத்தின் பிட்ச் எங்களுக்கே புதிதாக இருக்கிறது. ஹோம் கிரவுண்ட் என சொல்வதற்கான எந்த அணுகூலமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்கு கிடைக்கவில்லை என்பதால், இந்த பிட்ச் எங்களுக்கு மிகவும் கடினமாகவும் சவாலாகவும் இருக்கிறது என பேசினார். ஒருவகையில் பிளெம்மிங்கின் அதிருப்தி என்று கூட கூறலாம்.  நாங்கள் நினைத்த மாதிரி பிட்ச் இல்லை என்றும் அவர் கூறியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சிரியம் கலந்த கேள்வியை எழுப்பியுள்ளது. 

சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் என்றாலே சிஎஸ்கே அணியின் கோட்டை என்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் சேப்பாக்கம் எங்களுக்கு ஹோம் கிரவுண்ட் இல்லை என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் வெளிப்படையாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற கருத்தை கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். கேகேஆர் அணிக்கு சாதகமான பிட்ச் ஈடன் கார்டன் மைதானத்தில் இல்லை என்று கூறினார்.  அவரின் இந்த பேட்டி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பிளெம்மிங்கின் இந்த கருத்தும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.