சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன் முறையாக ஓடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பி.ராபர்ட் ராஜா கூறியதாவது: இந்தியாவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசடியாளர்கள் புதுப்புது வழிமுறைகளை கண்டறிந்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி அண்மைக்காலமாக பிரபலமாகி வருகிறது.
சைபர் குற்றங்களில் ஏமாறாமல் இருக்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறதே தவிர அதற்கான தீர்வுகளை யாரும் தருவதில்லை.
இந்த நிலையில்தான் நமது நிறுவனம், ஸார்கீசைன் மெயில், ஸார்கீசைன் ஸ்பாட் என்ற இரு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், 20 கோடி மின்னஞ்சல் பயனாளர்களும், 100 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கும் பயன்பெறுவர்.
ஸார்கீசைன் மெயில் என்பது ஒரு பிரவுசர் அல்லது பயனாளருக்கான மின்னஞ்சல் எக்ஸ்டென்ஷன் மென்பொருளாகும். இது, மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துவோரை குறிவைத்து நடத்தும் மின்னஞ்சல் பிஷிங் தாக்குதல், பிற மோசடிகளிலிருந்து அவர்களை பாதுகாக்க உதவுகிறது.
அதேபோன்று, ஸார்கீசைன் ஸ்பாட் என்பது ஒரு ஸ்மார்ட்போன் ஆப். இதை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். செய்தி அனுப்புபவர்கள் தங்கள் செய்திகளில் டிஜிட்டல்முறையில் கையெழுத்திடவும், பெறுநர்கள் அவற்றை சரிபார்க்கவும் அனுமதிக்கும் நடைமுறையை உலகளவில் முதல்முறையாக ஒடிசி அறிமுகப்படுத்துகிறது. இவ்வாறு ராபர்ட் ராஜா தெரிவித்தார்.