டெல்லியில் பா.ஜ.க. சார்பில் இன்று வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி

புதுடெல்லி,

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றவர் தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலு நாச்சியார். வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் அவரைப்பற்றிய சித்திர புத்தக வெளியீடும், நாடக நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, ராஜஸ்தான் துணை முதல்-மந்திரி தியா குமாரி, ஒடிசா துணை முதல்-மந்திரி பிரவதி பரி மற்றும் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் பிராந்திய அளவிலான முக்கிய ஆளுமைகளை பாஜக கொண்டாடி வரும் வேளையில் அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக மக்களை சென்றடைவதும் இதன் நோக்கமாக கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வேலு நாச்சியாரின் சந்ததியினர் பங்கேற்க உள்ளதாக பா.ஜ.க. மகளிர் அணி துணைத் தலைவர் பூஜா கபில் மிஸ்ரா கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.