ராஜபாளையம் திமுக எம்எல்ஏ-வான தங்கபாண்டியன் சமூக வலைதளத்தின் செல்லப்பிள்ளை. 2021-ல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியை தன்வசமாக்கிய தங்கபாண்டியன், இதுவரை தனக்கு தரப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கான ஊதியம் முழுவதையும், ஏழைப்பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவ உதவி உள்ளிட்ட சேவைகளுக்காக முழுமையாக செலவு செய்திருப்பவர்.
110 மாதங்களைக் கடந்தும் இந்த சேவையை விடாமல் தொடர்வதால் தான், சமூக வலைதளங்கள் தங்கபாண்டியனை கொண்டாடுகின்றன. ஆனால், அப்படிப்பட்டவருக்கு இம்முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா என்று சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
தனது சமூக சேவைகளால் திமுக தலைமையின் அபிமானத்தைப் பெற்ற தங்கபாண்டியன் ஒரு கட்டத்தில் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அண்ணாச்சியின் தயவின்றியே தலைமையிடம் தனக்கானதை எல்லாம் சாதித்துக் கொண்டதாகச் சொல்வார்கள்.
இது அண்ணாச்சி வட்டாரத்தை கொஞ்சம் சுதாரிக்க வைத்தது. அண்மையில் தனது மகனின் திருமணத்தை தூத்துக்குடியில் பிரமாதமாக நடத்தினார் தங்கபாண்டியன். நடத்தி வைத்தவர் உதயநிதி ஸ்டாலின். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “விருதுநகர் தெற்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அண்ணாச்சியின் அதிகார எல்லையைக் குறைக்கப் போகிறார்கள்.
வில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்துக்கு தங்கபாண்டியனை செயலாளராக்கப் போகிறார்கள்” என்று செய்திகள் சிறகடித்தன. இதுவும் அண்ணாச்சி வட்டாரத்தை யோசிக்க வைத்த நிலையில், அப்படியொரு மாவட்டம் உருவானால் அதற்கு, தன்னை மீறிப் போகாத ஒருவரை செயலாளராக கொண்டுவருவதற்கும் அண்ணாச்சி ஆயத்தமானதாகச் சொல்கிறார்கள். இதனிடையே, சமூகவலைதளத்தில் கொண்டாடப்படும் தங்கபாண்டியனுக்கு எதிராக பொதுவெளியில் சிலர் குற்றச்சாட்டுகளையும் அடுக்கி அவரது இமேஜை டேமேஜாக்க துணிந்தார்கள்.
ராஜபாளையம் நகராட்சிக்குள் தனக்கு விசுவாசமான கவுன்சிலர்களை வைத்துக் கொண்டு ‘அனைத்திலும்’ தலையிடுகிறார், கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று, செங்கல் சூளைக்கு மண் அள்ளியவர்கள் குறித்து புகார் அளித்தவரிடமே சமாதானம் பேசினார், நகராட்சி பணிகளை தனது சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கே ஒதுக்கிட வலியுறுத்துகிறார் என தங்கபாண்டியனுக்கு எதிராக பலவிதமாக குற்றச்சாட்டுகளைக் கிளப்பினார்கள். கட்சிக்குள் சீனியர்களை விட்டுவிட்டு தனக்கு விசுவாசமானவர்களுக்கு பதவிகளை வழங்க சிபாரிசு செய்ததாகவும் சர்ச்சை வெடித்தது.
இப்படியான சூழலில் தான் தங்கபாண்டியனுக்கு மீண்டும் ராஜபாளையத்தில் வாய்ப்புக் கிடைப்பது சிக்கல் தான் என்ற செய்தியையும் சிலர் கசியவிட்டிருக்கிறார்கள். “அண்ணாச்சியின் விருப்பத்துக்குரிய நபராக தங்கபாண்டியன் இப்போது இல்லை. அதனால் அவரது பெயரை இம்முறை அண்ணாச்சி டிக் பண்ண மாட்டார். இது தெரிந்துதான் தங்கபாண்டியன் இப்போது ராஜபாளையம் நகராட்சி மீது முழுக்கவனத்தையும் திருப்பி இருக்கிறார். விரைவில் ராஜபாளையம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயரவிருக்கிறது.
அப்படி உயர்த்தப்பட்டால் மேயராகி செட்டிலாகிவிடலாம் என்ற கணக்கும் தங்கபாண்டியனுக்கு இருக்கிறது. அதனால் தான் ராஜபாளையம் நகராட்சிக்குள்ளேயே வீடுகட்டி குடியேறும் முயற்சியில் இருக்கும் அவர், ராஜபாளையம் நகரச் செயலாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த நகர திமுக-வையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்” என்கிறார்கள் ராஜபாளையத்து அரசியல்வாதிகள்.
ராஜபாளையத்தில் இந்த முறையும் நீங்கள் தானே போட்டியிடுகிறீர்கள் என தங்கபாண்டியனிடம் கேட்டதற்கு, “இதே தொகுதியில் மீண்டும் நான் போட்டியிடுவது குறித்து முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தான் முடிவு செய்ய வேண்டும். நான் தான் என்றில்லை…
இந்தத் தொகுதியில் தலைமை யாருக்கு வாய்ப்பளித்தாலும் அவரை வெற்றி பெறவைப்போம். விருதுநகர் மாவட்ட திமுக-வானது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு தலைமையிலேயே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்; அதுவே வெற்றிக்கான வியூகம்” என்றார்.