திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 55 பேர் மீட்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 55 பேர் கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இவர்களை செங்கல் சூளை நடத்துபவர்கள் கொத்தடிமைகளாக நடத்துகிறார்கள் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாஸ் , வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடாசலம் , பெரியபாளையம் போலீஸார் ஆகியோர் திருக்கண்டலம் கிராமத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது, அங்கு கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஆண்கள் 23 , பெண்கள் 22 , சிறுவர் சிறுமிகள் 10 என 55 பேரை மீட்டனர்.பின்னர், மீட்புச் சான்றிதழ் வழங்கி 55 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.