அங்காரா,
துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், அண்டாலியா நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பிரபல போகிமோன் கார்டூனில் வரும் ‘பிக்காச்சூ’ கதாபாத்திரத்தின் வேடமணிந்து ஒருவர் பங்குபெற்றார். அந்தக் கதாபாத்திரத்தின் முழு உருவ ஆடையணிந்து அவர் கலந்துக் கொண்டது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
மேலும், அவருடன் தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை போராட்டக்காரர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவர் பங்குபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அங்கு விரைந்தவுடன் அங்கிருந்த தப்பித்து ஓடியவர்களுடன் பிக்காச்சூவும் ஓடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ஏராளமான பிக்காச்சூ ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.