தென்கொரியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

சியோல்,

தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும். 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீயை அணைக்க கிட்டத்தட்ட 9,000 தீயணைப்பு வீரர்கள், 130க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. அன் டோங் நகரம் மற்றும் பிற தென் கிழக்கு நகரங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேறவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காட்டுத்தீயால் சுமார் 45,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி மற்றும் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் உள்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தீக்கிரையாகின. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த காட்டுத்தீக்கு காரணம் மனித தவறுகளால் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கல்லறைகளில் தூய்மை செய்யும்போது புல்லை அகற்றி அதற்கு தீ வைத்து இருக்கலாம், அல்லது வெல்டிங் செய்யும் போது ஏற்பட்ட தீப்பொறிகளாலோ இது நிகழ்ந்திருக்கலாம். என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளதால் காட்டுத்தீ விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.