நைப்பியிதோ: மியான்மரின் மாண்டலேவுக்கு அருகே வெள்ளிக்கிழமை முற்பகல் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 800 கிலோ மீட்டர் தாண்டி, அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் வரை உலுக்கியது.
மியான்மரை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு பூகம்பத்தால் மியான்மரின் இரண்டு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் நைப்பியிதோவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்புக் குழுவின் வெளியில் எடுப்பதை எங்கும் காண முடிகிறது. அதேநேரத்தில் வானுயர்ந்த கட்டிடம் உட்பட கட்டுமான பணிகள் நடந்து வந்த மூன்று கட்டிடங்கள் இடிந்து விழுந்த இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பாங்காக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியான்மர் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600-ஐ கடந்துள்ளது. 3,000-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
சாகைங் பிளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்புக்கு அருகில் ஏற்பட்டதால் இவ்வளவு சக்தி வாய்ந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் ஆரம்பக்கட்ட கணிப்புகள் மியான்மரில் சுமார் 8,00,000 மக்கள் கடுமையான நிலநடுக்க பாதிப்புப் பகுதிகளுக்குள் இருந்திருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை 10,000-ஐ தாண்டலாம் என்றும் தெரிவித்திருந்தன.
பூகம்பம் என்றால் என்ன? – இந்தப் பின்னணியில் பூகம்பங்கள் ஏன் சில பகுதிகளில் மட்டும் ஏற்படுகின்றன. அவை எவ்வாறு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் மிக்கேல் ஸ்டேக்லர். அவர் கூறுகையில், “பல அடுக்குகளாக இருக்கும் பூமியின் மேலடுத்து டெக்டோனிக் அடுக்குகள் என்று அறியப்படுகின்றன. அவை ஜிக் சாக் வடிவில் ஒன்றொடு ஒன்று இணைந்து இருக்கின்றன. பொதுவாக, இந்த புதிரான அடுக்குகள் நிலையானதாக இருக்கும். ஆனால், அதன் விளிம்புகள் நகர்ந்து கொண்டிருக்கும். இவ்வாறு நகரும் அடுக்குகள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொள்ளும்போது, அது அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. மிகவும் மெதுவாக அல்லது நூற்றாண்டுகளாக அதிகரித்தப்படி இருக்கும் இந்த அழுத்தத்தால் பாறை அடுக்குகள் திடீரென குலுங்கத் தொடங்குகின்றன. இந்த அதிர்வே நிலநடுக்கத்தை உருவாக்குகிறது.
டெக்டோனிக் அடுக்குகளின் விளிம்புகளில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் மிகப் பரவலான அளவில் உணரப்படுகிறது. இதில் கடல்களுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பெரும்பாலும் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், நிலப்பரப்புகளில் ஏற்படும் அதிர்வுகள் சீட்டுக் கட்டுகளைப் போல கட்டிடங்களை சரித்து, பலத்த சேதங்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.
பூகம்பங்களை முன்கூட்டியே கணிக்க முடியுமா? – பூகம்பங்கள் எங்கே நிகழும் வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விஞ்ஞானிகளால் முன்கூட்டியே யூகிக்க முடியும். ஆனால், அவை எப்போது நிகழும் என்பதை கணிக்க முடியாது என்கிறார் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் நில அதிர்வு நிபுணர் வில் யேக். என்றாலும் முன்கூட்டியே ஏற்பட்ட பிரதான பெரிய நிலநடுக்கத்துக்கு பின்பு, அதன் அருகில் நிகழ இருக்கும் சின்னச் சின்ன நிலநடுக்கங்களை விஞ்ஞானிகளால் முன்கூட்டியே கணிக்க முடியும். இதனை பின் அதிர்வு என்று அழைப்பர். பெரிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக பின் அதிர்வுகள் ஏற்படுகின்றன என வில் விளக்குகிறார்.
பூகம்பம் நிகழும்போது என்ன செய்யவேண்டும்? – கலிபோர்னியா, ஜப்பான் உள்ளிட்ட பிளவுக்கோடுகள் பலவீனமாக உள்ள இடங்களில் இருக்கும் நாடுகளில் கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இது எல்லா இடங்களிலும் வெற்றியைத் தாராது. நிலநடுக்கத்தை நீங்கள் உணரும்போது பூமியின் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள் என்பதை பொறுத்து முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் மாறுபடும் என்கிறார் வில் யேக்.
மேலும் அவர் கூறுகையில், “அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நீங்கள் இருந்தால், நிலநடுக்கத்தை உணரும்போது, கட்டிடத்துக்குள் இருந்தால் தரையில் படுத்து கைகளால் உங்கள் தலையை மூடிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, மேஜை அல்லது அதுபோன்ற வலிமையான பொருள்களுக்கு கீழே பாதுகாப்பாக பதுங்கிக் கொள்ள வேண்டும். கண்ணாடி ஜன்னல் உள்ள பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். லிஃப்ட், எலிவேட்டர்களை பயன்படுத்தக் கூடாது. வெளியே இருந்தால் கட்டிடங்கள், மரங்கள் கீழே விழும் பகுதியில் இருந்து விலகி வெட்ட வெளியில் நிற்க வேண்டும். அதேபோல் நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து பூகம்பங்களால் உருவாகும் நிலச்சரிவு, தீ, சுனாமி போன்ற இரண்டாம் நிலை ஆபத்துகளுக்கான வாய்ப்புகளும் ஏற்படலாம்” என்றார். | வாசிக்க > மியான்மர் பூகம்ப பலி 1,644 ஆக அதிகரிப்பு: நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு