நேப்பிடா: மியான்மரில் நேற்று காலை 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அண்டை நாடான தாய்லாந்திலும் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலரை காணாததால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.
அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர். 732 பேர் காயமடைந்தனர் என்று நேற்று இரவு தகவல் வெளியானது.
மியான்மரில் நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்ததாகவும், இதனால் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது, சாலையில் நின்றிருந்த வாகனங்கள், தண்டவாளத்தில் நின்றிருந்த ரயில்கள் குலுங்கின. பல இடங்களில் மின் இணைப்பு, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. மீட்பு பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு மியான்மர் தயார் நிலையில் இல்லை. இதனால் அங்கு அவசரநிலை அறிவித்துள்ள ராணுவத் தலைவர் மின் அனுக் லாய்ங், சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடியுள்ளார்.
அண்டை நாடுகளிலும் பாதிப்பு: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், அங்கு சாதுசாக் பகுதியில் சீனாவை சேர்ந்த நிறுவனம் கட்டிவந்த 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இங்கு பணியாற்றிய 90 தொழிலாளர்களை தேடும்பணி நடந்து வருவதாக தாய்லாந்து துணைபிரதமர் பும்தாம் வேசாயாசாய் தெரிவித்தார்.
தாய்லாந்தில் அவசரநிலை: நிலநடுக்கத்தை தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் சினவத்ரா அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தாய்லாந்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் அதிர்வு உணரப்பட்டது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட இடங்களில் சுவரில் இருந்தபொருட்கள் ஆடியதாக மக்கள் கூறினர். இங்கு உயிரிழப்போ, பொருட்சேதமோ இல்லை.
மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்களில் தங்கியிருந்த பலரது நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. பலரை காணவில்லை. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
இந்தியா உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர், தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் கவலை அளிக்கின்றன. இந்தியா இயன்றவரை உதவிகளை வழங்க தயாராக உள்ளது. தயார் நிலையில் இருக்குமாறு இந்திய அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அந்நாட்டு அரசுகளுடன் இதுகுறித்து பேசுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளேன்’ என்று எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.