பாஜக மகளிர் அணி சார்பில் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு இன்று (மார்ச் 29) டெல்லியில் புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றவர் தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலு நாச்சியார். அவருக்கு பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லியில் இன்று புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாடகம் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி மற்றும் பாஜக பெண் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
நாடு முழுவதும் பிராந்திய அளவிலான முக்கிய ஆளுமைகளை பாஜக கொண்டாடி வரும் வேளையில் அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக மக்களை சென்றடைவதும் இதன் நோக்கமாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் வேலு நாச்சியாரின் சந்ததியினர் பங்கேற்க உள்ளதாக பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் பூஜா கபில் மிஸ்ரா கூறினார். அவர் மேலும் கூறுகையில், “எங்கள் அமைப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றும் உறுப்பினர்களையும் கவுரவிக்க உள்ளோம்” என்றார்.
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போரிட்ட வேலு நாச்சியாரை உத்வேகம் அளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் என பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி புகழ்ந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.