அதிமுக-வுடன் கூட்டணி, 50 ப்ளஸ் தொகுதிகள், துணை முதல்வர் பதவி, தமிழகத்தின் பவன் கல்யாண் என்றெல்லாம் தவெக பற்றி வலம் வந்த யூகங்கள் எல்லாம் சுக்கு நூறாகியிருக்கிறது. மீண்டும் பாஜக-வுடன் கைகோக்க தயாராகிவிட்டது அதிமுக. அப்படியானால் தவெக இனி என்ன செய்யும்? பாசிச கட்சி என பாஜக-வையும், பாயாச கட்சி என திமுக-வையும் குறிவைத்து தாக்கி வருகிறார் விஜய்.
அதேசமயம், அதிமுக-வை பற்றியோ, அதன் கடந்த கால ஆட்சி பற்றியோ விஜய் மூச்சுவிடவில்லை. இதனால் அவர், அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க திட்டமிடுவதாக செய்திகள் கசிந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு தரப்புக்கும் இடையில் ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்தன.
தவெக-வின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ரசிகர் மன்றத்திலிருந்து வந்தவர்கள். எனவே, 2026-ல் அதிமுக-வுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால், கணிசமான தொகுதிகளும் கிடைக்கும், நம்மவர்களுக்கும் அரசியல் அனுபவம் கிடைக்கும் என்பதே தவெக-வினரின் எண்ணவோட்டமாக இருந்தது.
அதிமுக-வும் தவெக-வை சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற மனநிலையிலேயே இருந்தது. எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் ஆதவ் அர்ஜுனா தவெக-வுக்குள் வந்தார். அதோடு பிரசாந்த் கிஷோரையும் கொண்டுவந்தார்.
தவெக-வின் 2-ம் ஆண்டு விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், “விஜய் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுவார். அவர் 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார்” என்று பற்றவைத்தார். ஆனால், அது தவெக-வின் கருத்தல்ல என அவசரமாக மறுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக-விடம் சரிபாதி தொகுதிகள், ஆட்சியில் சரிபாதி பங்கு என நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளை தவெக வைத்தது. இதில் ஜெர்க்கான அதிமுக, தனது ரூட்டையே மாற்றிவிட்டது. 2026-ல் பாஜக, பாமக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய பலமான கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் அதிமுக இப்போது இருக்கிறது.
இந்த நிலையில், விஜய் எப்படி 2026 தேர்தலை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடக்கத்தில் விஜய், திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட்டுகளை இழுத்து கூட்டணி அமைக்க காய் நகர்த்தினார், அது நடக்கவில்லை. அடுத்து, அதிமுக கூட்டணி வாய்ப்பும் போய்விட்டது. இனி விஜய் பக்கம் உள்ள ஒரே வாய்ப்பு சீமான் தான்.
ஆனால் சீமானும் சமீபமாக பெரியார் பேரைச் சொல்லி விஜய்யை கடுமையாக விமர்சிக்கிறார். இருப்பினும் ஒருவழியாக தவெக – நாதக கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் நடக்கவில்லை என்றால், வேறு வழியே இல்லாமல் 234 தொகுதிகளிலும் தவெக தனித்தே போட்டியிட்டு ஆகவேண்டும்.
பாஜக-வையும் இணைத்து அதிமுக உருவாக்கும் கூட்டணியால் தவெக-வுக்கு ஒரு நன்மையும் கிடைத்துள்ளது. அதாவது திமுக, பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் அரசு ஊழியர்கள், இளைஞர்கள் வாக்குகள் விஜய்க்கு கிடைக்கலாம். ஆனால், அது வெற்றிபெறும் அளவுக்கு இருக்குமா என்பதுதான் கேள்வி.
இதுகுறித்து பேசிய தவெக நிர்வாகிகள், “அதிமுக-வுடன் நாங்கள் கூட்டணி பேசியதாக எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதேசமயம், தமிழகத்தில் மாற்றத்துக்கான ஆட்சியை உருவாக்க வலுவான கூட்டணி அமைக்கும் முன்னெடுப்புகளும் நடந்து வருகின்றன.
தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடவும் நாங்கள் தயார்தான். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அதற்குள் காட்சிகள் மாறும், பொறுத்திருந்து பாருங்கள்” என்கின்றனர். எது எப்படியோ, ‘சேஃப் ஸோனில்’ இருந்த விஜய் ‘கொந்தளிப்பான சூழலை’ நோக்கி தள்ளப்பட்டுள்ளார். பலமான திமுக, அதிமுக கூட்டணிகளை சமாளிக்க என்ன வியூகம் வகுக்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.