வாஷிங்டன்: புதிய வரிவிதிப்பு முறை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல பலன்களைத் தரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூ ஜெர்சி மாகாண அட்டர்னி ஜெனரலாக அலினா ஹப்பா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் புத்திசாலி மனிதர்” என்றும் “சிறந்த நண்பர்” என்றும் குறிப்பிட்டார்.
“பிரதமர் மோடி சமீபத்தில் தான் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக உள்ளோம். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர் (பிரதமர் மோடி) மிகவும் புத்திசாலி மனிதர், என்னுடைய சிறந்த நண்பர். (வரி தொடர்பாக) நாங்கள் மிகவும் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்தியாவிற்கும் நம் நாட்டிற்கும் இடையே இது மிகவும் சிறப்பாக செயல்படும் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். கனடா, மெக்ஸிகோ, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், இதனால் அமெரிக்கப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சிரமங்கள் இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். பதிலுக்கு, சம அளவு வரி விகிதத்தை உருவாக்கும் நோக்கில் பரஸ்பர அளவு வரிவிதிப்பு முறையை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 25% வரி விதிக்கப்படும் என்ற ஒரு முக்கிய கொள்கை அறிவிப்பை ஓவல் அலுவலகத்திலிருந்து சமீபத்தில் வெளியிட்டார். இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் அசெம்பிள் செய்யப்படும் அமெரிக்க நிறுவன பிராண்டுகளுக்கும் இந்த வரி உயர்வு இருக்கும் என்பதால், அமெரிக்காவில் விற்கப்படும் வாகனங்களில் 50 சதவீதம் பாதிப்பைச் சந்திக்கும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்க எல்லைகளுக்குள் அதிக உற்பத்தி வசதிகளை நிறுவ கார் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், “ஏப்ரல் 2 ஆம் தேதி பரஸ்பர வரி நடைமுறைக்கு வரும். பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டாலும் அமெரிக்காவின் வளம் பல தசாப்தங்களாகப் பறிக்கப்பட்டு வருகிறது. இனி அவ்வாறு நடக்க விடமாட்டேன். ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா, இந்தியா விதித்த வரிகளின் அடிப்படையில் அமெரிக்கா வரிகளை விதிக்கும்.” என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.