புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுடன் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மியான்மர் பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ‘ஆபரேஷன் பிரம்மா’வை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரின் தலைமை ஜெனரல் மின் ஆங் ஹிலேங்குடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார். இந்தச் சவாலான நேரத்தில் மியான்மருடன் ஒற்றுமையுடன் நிற்பதற்கு நெருங்கிய நட்பு மற்றும் அண்டை நாடு என்ற முறையில் இந்தியாவின் திடமான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் தெரிவித்தார். இந்தப் பேரிடரைச் சமாளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ஆபரேஷன் பிரம்மாவை இந்திய அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக ஊடக எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மியான்மரின் தலைமை ஜெனரல் மின் ஆங் ஹிலேங்குடன் பேசினேன். பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். நெருங்கிய நட்பு மற்றும் அண்டை நாடு என்ற முறையில், இந்தக் கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது.
பேரிடர் நிவாரணப் பொருட்கள், மனிதாபிமான உதவிகள், தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் ஆகியவை ஆபரேஷன் பிரம்மாவின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய அரசு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மருக்கு முதற்கட்டமாக நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. உணவு, கூடாரங்கள், அத்தியாவசியமான மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
#OperationBrahma gets underway.
First tranche of humanitarian aid from India has reached the Yangon Airport in Myanmar.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 29, 2025