பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன ? வெளிப்படையாக பேசிய சென்னை கேப்டன்

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

17 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் 2008ம் ஆண்டு சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியது. அதன்பின், பெங்களூருவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சென்னை வெற்றிபெற்றது. சென்னை அணியின் கோட்டையாக சேப்பாக்கம் திகழ்ந்தது . தற்போது 17 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில் , தோல்விக்கான காரணம் தொடர்பாக பேசியுள்ள சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது ,

உண்மையைச் சொல்லப் போனால், இந்த விக்கெட்டில் 170 ரன்கள் தான் சிறந்த ஸ்கோர் என்று கருதுகிறேன். பேட்டிங் செய்ய பிட்ச் சிறப்பாக இல்லை . பீல்டிங்கில் மோசமான நாளாக அமைந்தது . அதுவே எங்ககுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது . பெரிய வித்தியாசத்தில் நாங்கள் தோல்வியடையவில்லை, 50 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முக்கியமான நேரங்களில் நாங்கள் கேட்சுகளை விட்டுவிட்டோம், அதன் பிறகு எப்போதும் ஒரு சிக்ஸர் அல்லது கூடுதல் பவுண்டரி வந்து கொண்டிருந்தது.

ராகுல் திரிப்பாட்டி அவரின் ஷாட்டை விளையாட முயற்சித்தார். நானும் எனது ஷாட்டை ஆட முயற்சித்தேன். சில நேரங்களில் அது சரியாக நடக்கும்.சில நேரங்களில் நாம் நினைத்தது நடக்காது. அடுத்த போட்டிக்கு முன் அதிகமாக ஆலோசிப்பதற்கு நேரமில்லை. கவுகாத்திக்கு செல்ல வேண்டும். பீல்டிங்கில் கூடுதலாக முன்னேற வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

நாளை இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.