பொதுமக்கள் பணத்தை வீணடித்த வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி போலீஸார், நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு டெல்லியிலுள்ள கூடுதல் பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் நேஹா மித்தல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது:
2019-ல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தபோது, பொதுமக்கள் பணத்தை வீணடித்து டெல்லி முழுவதும் மிகப்பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து இதற்குக் காரணமானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை, அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஏப்ரல் 18-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் நேஹா மித்தல் தள்ளிவைத்தார்.