ரம்ஜான் பண்டிகையின்போது மசூதியில் இடமில்லையெனில் சாலையில் தொழுகை நடத்துவோம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் டெல்லி தலைவர் ஷோஹிப் ஜமாய் தெரிவித்துள்ளார்.
தற்போது ரம்ஜான் மாத நோன்பை முஸ்லிம்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனிடையே, உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில், மசூதியின் கூரைகள் அல்லது சாலைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது எனவும், அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மீரட் நகரிலும் இதேபோன்ற ஒரு அறிவிப்பு வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. மீரட் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாலைகளில் தொழுகை நடத்துவோர் மீது வழக்குகள் பதிவாவதுடன், அவர்களது பாஸ்போர்ட் மற்றும் வாகன உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியின்(ஏஐஎம்ஐஎம்) டெல்லி பிரிவும் ஓர் அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் டெல்லி தலைவர் டாக்டர். ஷோஹப் ஜமாய் கூறியுள்ளதாவது: இது டெல்லி. உ.பி.யின் மீரட் அல்லது சம்பல் அல்ல. மசூதியில் போதுமான இடம் இல்லை என்றால், நாங்கள் தெருவில் தொழுகை நடத்துவோம். வாய்ச்சவடால் உள்ள சில பாஜக தலைவர்கள் டெல்லியில் ஈத் தொழுகை குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இது சம்பல் அல்லது மீரட் அல்ல. இது டெல்லி. ஆம், அனைவரின் டெல்லி என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஈத் தொழுகை இங்கு நல்லமுறையில் நடத்தப்படும். மசூதியில் போதுமான இடம் இல்லை என்றால், சாலைகளில் தொழுகை நடத்தி முடிக்கப்படும். இந்த தொழுகையானது ஈத்காக்களிலும், வீடுகளின் கூரையிலும் கூட நடத்தப்படும். கவாட் யாத்திரையின் போது, பிரதான சாலையை பல மணி நேரம் மூடலாம். இதைபோல், தொழுகையின் போதும், 15 நிமிடங்கள் சாலைகளை மூடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது காவல்துறையின் பொறுப்பாகும்.
டெல்லி பாஜக தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அபத்தமான அறிக்கைகளை வெளியிடுவது ஒரு பழக்கமாகிவிட்டது. கடைகள் மூடப்பட வேண்டும் என்றும், சாலையில் தொழுகை நடத்தப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்படுகிறது. அரசிடம் சாலையில் ஏன் தொழுகை நடத்தப்படாது? என்று நான் கேட்க விரும்புகிறேன். டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு ஒரு வேண்டுகோள், முஸ்லிம்களுக்கு எதிராக தவறான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று அவர் தனது பாஜக தலைவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில், இந்த நாடு அரசியலமைப்பு சட்டப்படி இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.