மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக அதிகரிக்கும். இதன்மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதை சுருக்கமாக டிஏ அழைப்பர். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அகவிலைப்படியை 2 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு தொடர்பாக எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்த நிலையில், நேற்று அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அகவிலைப்படி 50 சதவீதத்திலிருந்து 53% ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது 2 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வு என்பது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. அப்போது கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அகவிலைப்படியானது, அரியர்ஸுடன் சேர்த்து ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் என மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன் அடைய உள்ளனர்.

மேலும் தற்போதைய 2 சதவீத அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரம் எனும் போது அவருக்கு மாதம் ரூ.360 அகவிலைப்படி கூடுதலாக கிடைக்கும். அப்படி பார்த்தால் ஒரு ஆண்டில் ரூ.4,320 வரை கிடைக்கும்.

மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு, அடிப்படை பென்சன் ரூ.9 ஆயிரமாக இருக்கும்போது அவர்களுக்கு மாதம் ரூ.180 அதிகரிக்கும். இதன்மூலம் பார்த்தால் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,160 வரை கூடுதலாக கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூ.22,919 கோடி ஒதுக்கீடு: மேலும், ரூ.22,919 கோடி மதிப்பிலான செமி கண்டக்டர் அல்லாத எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு திட்டத்துக்கு மத்தி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “காரிப் பருவத்தில் பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களுக்கு ரூ.37,216 கோடியை மானியமாக வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.