மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் ராகேஷ் கடேகர் (35). மென்பொருள் பொறியாளரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி கவுரி சம்பரேகர் (32) உடன் பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த ராகேஷ் கடேகர் தனது மனைவி கவுரி சம்பரேகரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. அவரது உடலை பெரிய சூட்கேசில் மறைத்து வைத்துள்ளார்.
பின்னர் ராகேஷ் கடேகர் தனது மாமனாரை தொடர்பு கொண்டு, கவுரி சம்பரேகர் தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கவுரியின் பெற்றோர் பெங்களூரு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, கவுரி கொலை செய்யப்பட்டு சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெங்களூருவில் இருந்து பேருந்து மூலம் மகாராஷ்டிராவுக்கு தப்பியோடிய ராகேஷ் கடேகரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இந்த கொலை குறித்து விசாரணை நடத்திவருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.